கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்சத்திர சிகிச்சை விடுதி திறந்து வைப்பு

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் முதன் முதலாகக் கண் சத்திரசிகிச்சை விடுதி 22 மார்ச் 2019 அன்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் அவர்களால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

இதுவரைகாலமும் நோயாளர்கள் கண் சத்திர சிகிச்சைகளுக்காக கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்குச் சென்று வைத்திய சிகிச்சைகளைப் பெற்று வந்தனர்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.காண்டீபன் அவர்கள் சுகாதார அமைச்சிற்கு கோரிக்கை விடுத்ததன் பலனாக விசேட கண் சத்திர சிகிச்சை நிபுணர் கிரிதரன் அவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய விடுதி திறந்து வைக்கப்பட்டு கண் சத்திரசிகிச்சைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.காண்டீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி. திருவாகரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் யாழ் போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி மற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.