சர்வதேச மகளிர் தினம் – 2019

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் ‘நல்வாழ்வுக்கான சமத்துவம்’ எனும் சர்வதேச கருப்பொருளுடன் சர்வதேச மகளிர் தினம் 2019.03.08 அன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள், தொழிற்றுறை, அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எழுத்தாளர், கவிஞர், ஓய்வு பெற்ற அதிபர் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தலைவர், ‘ஜெய்ப்பூர்’ புனர்வாழ்வு மற்றும் அங்கவீனமுற்றோர் சங்கம், ஓய்வு பெற்ற வைத்திய ஆலோசகர் மற்றும் விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வைத்திய கலாநிதி (திருமதி). ஜெயதேவி கணேசமூர்த்தி அவர்களும், கௌரவ விருந்தினராக ஓய்வு பெற்ற பணிப்பாளர், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி பிரிவு, கல்வி அமைச்சு மற்றும் சமூக சேவையாளர் திருமதி.சுவர்ணா நவரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் கௌரவ ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன், திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் பங்கு பற்றி இந் நிகழ்வினைச் சிறப்பித்திருந்தனர்.

தொடர்ந்து மாகாண, மாவட்ட மட்ட சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு கேடயமும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், மகளிர் தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட கட்டுரை, கவிதை மற்றும் சித்திரப் போட்டிகளில் மாகாண, வலய மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் கேடயங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். மேலும் இந் நிகழ்வில் சமூகத்திற்கு பல சேவைகளை ஆற்றிய பத்துப் பெண்களும் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மருதனார்மட நுண்கலைப்பீட நடனத்துறை மாணவர்களினாலும் பாடசாலை மாணவர்களினாலும் நடன நிகழ்வுகளும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

நிகழ்வின் அடையாளமாக ‘மகளிர் மகுடம்’ எனும் விசேட கடன் திட்டம் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கப் பதிவாளரும், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஐந்து பெண் சமூக மட்ட அமைப்புக்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் கூட்டுறவு நிதியிலிருந்து மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் அவர்களினால் வழங்கப்பட்டது. இறுதியில் அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி.நி. லாகினி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.