இரணைமடுக் குளத்தின் தற்போதைய நிலைமை

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரணைமடுக் குளமானது வவுனியாவின் சேமமடுக் குளத்திலிருந்து உற்பத்தியாகி முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஊடாக 60 கிலேமீற்றர் தூரம் பயணிக்கும் கனகராஜன் ஆற்றின் மூலமாக நீரினை பெற்றுக்கொள்கின்றது.

அதன் மொத்த நீரேந்துப் பிரதேசமானது 588 சதுர கிலோமீற்றர்களாகும். முதன்முதலாக இரணைமடு நீர்த்தேக்கமானது நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் 49 மில்லியன் கனமீற்றர் கொள்ளளவாக அமையுமாறு 1902 ஆம் ஆண்டு நீர்மானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1920 ஆம் ஆண்டு நிறைவுறுத்தப்பட்டன. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மூன்று குள விரிவாக்கால் பணிகளினூடாக 1975 ஆம் ஆணடில் 131 மில்லியன் கனமீற்றர்களாக (MCM) உயர்த்தப்பட்டது.

குளத்தின் கீழான வாய்க்கால்களின் புனரமைப்பிற்கான IFAD திட்ட நிதியுதவிக்கு மேலதிகமாக, அண்மையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியீட்டலில் மேற்கொள்ளபட்ட அபிவிருத்தி வேலைகளினூடாக குளத்தின் கொள்ளளவானது 17 MCM கன மீற்றர்களால் அதிகரிக்கப்பட்டதுடன் (தற்போது 148 MCM), 3 மேலதிக வான்கதவுகள் பொருத்தப்பட்டு தற்போதைய நிலையில் மொத்தமாக 14 வான்கதவுகளும் மின்சாரம் ஊடாக இயக்கும் முறைக்கு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.

குளத்தின் முழு நீர்மட்டம் தற்பொழுது 36 அடி ஆகும். குளத்தின் அதியுயர் வெள்ள மட்டம் 41 அடி ஆகவும் அணைக்கட்டின் உயரம் 47 அடி ஆகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ் அபிவிருத்திகளினூடாக இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த சிறுபோக பயிர்ச்செய்கை விஸ்தீரணமானது, 8000 ஏக்கரில் இருந்து 12,000 தொடக்கம் 13,000 ஏக்கர் வரை அதிகரிக்கப்படவுள்ளதுடன், கிளிநொச்சி குடிநீர்த் திட்டத்திற்கும் நன்னீர் மீன் குஞ்சு பொரிக்கும் திட்டத்திற்கும் நீர் தொடர்ந்து வழங்குவதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அண்மைய குள கட்டுமான அபிவிருத்தித் திட்டமானது வட மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தலைமையிலான திட்ட முகாமைத்துவப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததுடன் வடிவமைப்பு மற்றும் வேலைத்திட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பொறியியல் ஆலோகர் குழுவினர் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்காக ஒப்பந்ததாரர்கள் தேசிய போட்டிக் கேள்வி முறையில் தெரிவு செய்யப்பட்டிருந்து நிறைவு செய்யப்பட்டது. முடிவுற்ற வேலைத்திட்டங்கள் வடகீழ் பருவமழைகாலத்தில் குளத்தினை நிர்வகிக்கும் பொருட்டு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கிளிநொச்சிப் பிரிவிடம் கையளிக்கப்பட்டன. அத்துடன் ஒப்பந்த நடைமுறைகளுக்கு அமைவாக வழுக்களை அடையாளப்படுத்தும் காலப்பகுதிக்குள் பொறியியல் ஆலோசகர்கள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் (வ.மா) அடையாளப்படுத்தப்படும் வழுக்கள் ஒப்பந்ததாரரினால் உரிய வகையில் சீர்செய்யப்படும்.

கௌரவ வடமாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய ஒப்பந்தகாரர், ஆலோசகர்கள் மற்றும் திணைக்களத்தினரின் பங்குபற்றலுடன்  விசேட கூட்டம் நடாத்தப்பட்டு இம்மாதம் 31ம் திகதிக்குமுன்னர் வழுக்களை திருத்தும் பணியினை முடிக்க இணக்கம் காணப்பட்டது. இதற்கமைவாக ஒப்பந்தகாரர்கள் வான்கதவுகளில் காணப்பட்ட நீர்க்கசிவுகளை சீர்செய்திருப்பதுடன் மின்சார கட்டுப்பாட்டு சாதனங்களில் காணப்பட்ட குறைபாடுகள் அவர்களால் ஏற்கனவே சீர்செய்யப்பட்டுள்ளன. அத்துடன் கதவுகளற்ற கொங்கிறீற் வான் பிரதேசத்தின் சில இடங்களிலும் சில தூண்கள் மற்றும் கொங்கிறீற் பிரதேசத்திலும் அடையாளப்படுத்தப்பட்ட வழுக்கள், மற்றும் சில கதவுகளில் காணப்படும் சிறு திருத்தம் என்பன குள நீர்மட்டமானது குறைவடைந்த பின்னர் சீர் செய்யப்படும்.

மேலும் நீர்க்கசிவுகள் சீர்செய்யப்பட்டமையை தொழில்நுட்ப ரீதியாக பொறியியல் ஆலோசகர்களினால் சான்றுப்படுத்தப்பட்ட பின்னர் நீர்ப்பாசனத் திணைக்களம் முழுமையாக கையேற்க நடவடிக்கை எடுக்கும்.

அதன் பின்னர் குளத்தின் வழமையான இயக்குதல் மற்றும் பராமரிப்பு வேலைகள் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் (கிளிநொச்சி பிராந்தியம்) அவர்களின் ஆலோசனைக்கமைய நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் (கிளிநொச்சிப் பிரிவு) இனால் மேற்கொள்ளப்படும். இதில் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மூவர் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் நால்வரினாலும் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் பராமரிப்பு ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக குளக்கட்டு சாய்வினை பராமரிக்கும் பணிகள் வெளியாட்களினால் ஒப்பந்தமாக விசேட மீண்டுவரும் செலவீனத்தின் கீழ் செய்யப்படல் வேண்டும்.