வட மாகாண கல்வி அமைச்சின் 2020 ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல்

கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் 2020 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தலுக்கான நிகழ்வு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் காலை 9.30 மணியளவில் கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்கள், மாகாணக் கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், கலாச்சார திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண வலயக் கல்வி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செயலாளரினால் தேசியகொடி ஏற்றிவைக்கப்பட்டதோடு யாழ். வலயக் கல்வி உத்தியோகத்தர்களினால் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.செ.உதயகுமார் அவர்களால் மாகாணக் கொடி ஏற்றிவைக்கப்பட்டது.
தொடர்ந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்கள் மற்றும் மக்களை நினைவு கூர்வதற்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி இடம்பெற்ற பின்னர் கல்வி அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தரினால் அரசாங்க சேவை உறுதிமொழி வாசிக்கப்பட அனைத்து உத்தியோகத்தர்களாலும் சத்தியப்பிரமாணம் எடுக்கப்பட்டது.
இறுதியாக செயலாளர் அவர்கள் உரை நிகழ்துகையில் “மக்களின் நலனுக்காக ஒரு புதிய பொருளாதார மற்றும் சமூக ஒழுங்கைக்கொண்ட ஒரு சிறந்த நாளை உருவாக்கும் முயற்சியில் அனைத்து உத்தியோகத்தர்களும் வினைத்திறன் மிக்க பிரஜையாகவும் நேர்மையாகவும் உறுதியான பங்களிப்பினை வழங்க வேண்டும்“ என்று வலியுறுத்தினார்.
அத்துடன் “முன்னேறும் நாட்டுக்கு வளர்கின்ற மரம்” என்ற தொனிப்பொருளினாலான விசேட தேசிய மரம் நடும் திட்டம்-2020 இனை நடைமுறைப்படுத்தும் நோக்கில் காலை 9.45 மணியளவில் செயலாளர் மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்களினால் கல்வி அமைச்சின் வளாகத்தில் மரம் நடுகை நிகழ்வு இடம்பெற்றது.