“காலநிலைச் சவால்களை வென்று நிலைபேறான விவசாயத்தை நோக்கி!” – ஒட்டுசுட்டான் விவசாயக் கண்காட்சியை ஆளுநர் பார்வையிட்டார்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில், ஒட்டுசுட்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விவசாயக் கண்காட்சியை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.

‘காலநிலைச் சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை நோக்கி’ எனும் காலத்துக்கு ஏற்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சி, நேற்று (26.01.2026) திங்கட்கிழமை ஆரம்பமாகி, இன்றுடன் நிறைவுபெற்றது.

கண்காட்சியைப் பார்வையிட்ட ஆளுநருக்கு, விவசாயத் துறை அதிகாரிகளால் கூடங்கள் தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. குறிப்பாக:

காலநிலை மாற்றங்களை எதிர்கொண்டு மேற்கொள்ளக்கூடிய நெற் பயிர்ச்செய்கை முறைகள்.

நவீன முறையில் தேனீ வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு.

நஞ்சற்ற உணவை நோக்கிய சேதனப் பசளைத் தயாரிப்பு.

ஒருங்கிணைந்த பண்ணை முறை மற்றும் கால்நடை வளர்ப்பு.

சுதேச மருத்துவப் பயிர்ச்செய்கை முறைகள்.

ஆகியன தொடர்பான செய்முறை விளக்கங்கள் மற்றும் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை ஆளுநர் ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன், கலந்துரையாடினார்.

இக்கண்காட்சியைப் பார்வையிடுவதற்குப் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் வருகை தந்திருந்தனர். இது விவசாயத் தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய அணுகுமுறைகள் குறித்து இளைய சமுதாயத்தினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக அமைந்தது.