கிளிநொச்சி மாவட்டத்தில் மாயவனூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நெற்செற்கையில் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக விளைச்சலை அதிகரித்தல் எனும் கருப்பொருளிலான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியீட்டத்தின் (PSDG) கீழ் பயிரிடப்பட்ட பரசூட் முறையிலான நெற்செய்கையின் அறுவடை தொடர்பான வயல் விழா நிகழ்வானது 02.07.2025 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இ.இளங்குமரன் என்பவரின் வயலில் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.கிருசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் திரு.தெட்சணாமூர்த்தி யோகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திருமதி.சோ.விஜயதாசன், பாடவிதான உத்தியோகத்தர்கள், குறித்த பகுதிக்குரிய கிராம மட்ட உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், விவசாயிகள் பொது மக்கள் எனப்பலரும் பங்குபற்றி இருந்தனர்.
இவ் வயல் விழா நிகழ்வில் பரசூட் முறையிலான நெற்செய்கை களத்தினை விருந்தினர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து வடக்கு மாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் திரு.தெட்சணாமூர்தி யோகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினர் உரையினை ஆற்றினார். அவர் தனது உரையில் நெற்பயிர்ச் செய்கையில் குறித்த தொழில்நுட்ப முறையினை அதிகளவில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் எனவும் கிளிநொச்சி மாவட்டம் நெற்செய்கைக்கு சாதகமான மண் வளத்தினை உடையது எனவே மேற்படி தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்துவதன் மூலம் அதிகளவான உற்பத்தியினை பெற்றுக்கொள்ளவதுடன் பீடை நோய்த் தாக்கங்களில் இருந்தும் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறியிருந்தார் . தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் மற்றும் விவசாயிகள் கருத்துரைகளுடன் நிகழ்வானது இனிதே நிறைவு பெற்றது.