2022 ஆண்டிற்கான வடக்கு மாகாண நடமாடும் சேவை ‘உங்கள் வாசலில் நாங்கள்’ – வவுனியா மாவட்டம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு. ஜீவன் தியாகராஜா அவர்களின் நெறிப்படுத்தலிலும் மற்றும் பிரதம செயலாளர் திரு. எஸ். எம். சமன் பந்துலசேன அவர்களின் வழிகாட்டலிலும் வடக்கு மாகாண மக்களிற்கான இவ் ஆண்டிற்கான நடமாடும் சேவை வடக்கு மாகாணத்தின் மாவட்டங்களில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக முதலாவது நடமாடும் சேவை வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு (வ/ஈரற்பெரியகுளம் பரக்கும் மகா வித்தியாலயம்), வெங்கலசெட்டிக்குளம் (வ/அல்-காமியா மகாவித்தியாலயம்), வவுனியா வடக்கு (வ/ஒலுமடு மகா வித்தியாலயம் – நெடுங்கேணி) மற்றும் வவுனியா நகர் (வ/காமினி மகா வித்தியாலயம்) ஆகிய இடங்களில் முறையே பெப்ரவரி மாதம் 21, 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் நடைபெற்றது.

இந் நடமாடும் சேவையில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந் நடமாடும் சேவையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகம், வடக்கு மாகாண சபையின் கீழ் உள்ள செயலகங்கள், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களிடமிருந்தான பொதுமக்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டதுடன் வவுனியா மாவட்ட செயலகத்தின் சில பிரிவுகளின் சேவைகளும் வழங்கப்பட்டிருந்தன.

வடக்கு மாகாண நடமாடும் சேவை நடைபெற்ற சம காலப்பகுதியில் மக்களின் குறை நிவர்த்தி நடவடிக்கைகளாக குறித்த பிரதேசங்களில் பின்வரும் விசேட நிகழ்ச்சித்திட்டங்களும் நடைபெற்றன.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு – வவுனியா தெற்கு, வெங்கலச்செட்டிக்குளம், வவுனியா வடக்கு, வவனியா நகர்

வவுனியா தெற்கு அண்டமஸ்கடவ அணைக்கட்டு வீதி திருத்த வேலைகள் ஆரம்ப நிகழ்வு

மரம் நாட்டல் நிகழ்வு – வவுனியா தெற்கு, வெங்கலச்செட்டிக்குளம், வவுனியா வடக்கு, வவுனியா நகர்

கைத்தொழில்துறைத் திணைக்களத்தின் கைத்தொழில் சார்ந்த திறன் விருத்தி தேவைகள் இனம்காணல், சுயதொழில் உதவி வழங்கல், வியாபார விருத்தி சேவைகள் – வவுனியா தெற்கு, வெங்கலச்செட்டிக்குளம், வவுனியா வடக்கு, வவுனியா நகர் கண்காட்சி (பிரதேச விற்பனைக்கூடம்) – அனைத்து பிரதேசங்களிலும்

 

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களிற்கான தாபன நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளிற்கு தீர்வு வழங்குதல், ஆரம்ப பிள்ளைபருவ விருத்தி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, விளையாட்டு கழகங்களை பதிவுசெய்தல், விளையாட்டு நிகழ்ச்சிகள் தொடர்பான விழிப்புணர்வு, இளைஞர் விவகாரம் தொடர்பான விழிப்புணர்வு, மைதான நிகழ்வுகள் மற்றும் குறும்பட நிகழ்ச்சிகள் – அனைத்து பிரதேசங்களிலும்


வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் பார ஊர்திகளிற்கான ஒளித்தெறிப்படையும் ஸ்ரிக்கரகள் வழங்கல், வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு செயலமர்வு, மருத்துவ முகாம் மற்றும் சாரதிப் பயிற்றுவிப்பாளர்களிற்கான விழிப்புணர்வு செயலமர்வு – அனைத்து பிரதேசங்களிலும்

வடமாகாண சுதேச வைத்திய திணைக்களத்தினால் பொதுமக்களிற்கான பரிசோதனைகளுடன் நடமாடும் மருத்துவ முகாம், மருத்துவ தாவரங்கள் விநியோகம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சுவதாரணி குடிநீர் வழங்கல் – அனைத்து பிரதேசங்களிலும்

மாகாண நிர்ப்பாசனத் திணைக்களத்தினால் ஆலோசனை சேவை, நீர் விரயமாதலை தடுப்பதற்கான நீர் முகாமைத்துவ செய்முறை விளக்கங்கள் வழங்குதல், வவுனியா மாவட்டத்தில் உள்ள நீர் மூலங்கள் தொடர்பான விளக்கமளித்தல் – அனைத்து பிரதேசங்களிலும்.

மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் பண்ணையாளர்களுக்கான ஆலோசனை சேவைகள், கால்நடை தீவனம் தயாரிக்கும் இயந்திரம் வழங்கல், பால் உற்பத்தி தொடர்பான விளக்கமளித்தல்; – அனைத்து பிரதேசங்களிலும்

மாகாண நன்நடத்தை சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தினால் சிறுவர் காப்பகங்களில் உள்ள சிறுவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு, சிறுவர் விருத்தி நிலையங்களில் உள்ள சிறுவர்களுக்கான சுய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், சிறுவர் விருத்தி நிலையங்களில் உள்ள சிறுவர்களுக்கான ஊக்குவித்தல் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள் – அனைத்து பிரதேசங்களிலும்

மாகாண விவசாயத்திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்திற்கான அடிப்படை விவசாய தகவல்கள் வழங்குதல், அறுவடை தொழில்நுட்பங்கள் தொடர்பான விளக்கமளித்தல், விவசாயப் பண்ணை தொடர்பான இயந்திரங்கள் மற்றும் கருவிகள் காட்சிப்படுத்தல், ஒருங்கிணைந்த பயிர்ச்செய்கை தொடர்பான விளக்க காட்சிகள், நீர் முகாமைத்துவ முறைமைகள் மற்றும் காலநிலை எதிர்வுகூறும் காட்சித்தொகுப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டன, விதைகள் மற்றும் நாற்றுக்கள் மற்றும் சேதன கிருமிநாசினி விற்பனை நிலையம், சேதனப் பயிர்ச்செய்கை தொடர்பான விளக்கங்கள், விவசாயிகளுக்கான ஆலோசனை வழங்கல் மற்றும் மண் பரிசோதனை, பயிர்ச் சிகிச்சை நிகழ்ச்சித் திட்டங்கள், தேனீ வளர்ப்பு மற்றும் காளான் வளர்ப்பு காட்சிப்படுத்தல்கள், உணவு மற்றும் நீர் பாதுகாப்பு திட்டங்கள் காட்சிப்படுத்தல், பழக்கன்றுகள் மற்றும் மரக்கறி நாற்று மேடை தயாரிப்பு. – அனைத்து பிரதேசங்களிலும்.

மாகாண மகளிர் விவகார அமைச்சினால் பால்நிலை வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு – அனைத்து பிரதேசங்களிலும்.
வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் முதியோர்களுக்கான உடல்நல மற்றும் மனநல சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, முதியோர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கல் மற்றும் வலுவிழந்தோருக்கான உபகரணங்கள் வழங்கல் – அனைத்து பிரதேசங்களிலும்.

இந் நடமாடும் சேவையில் வவுனியா மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச மக்களும் கலந்து பயன்பெற்றுக்கொண்டனர். அனைத்து பிரதேசங்களிலும் மொத்தமாக 2535 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றன. இவற்றிற்கு உடனடித் தீர்வுகள் வழங்கப்பட்டதுடன் மீதமாகவுள்ள முறைப்பாடுகள் தீர்வினை வழங்கும் பொருட்டு அவை தொடர்புடைய செயலகங்கள், அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டடுள்ளன.

இந் நடமாடும் சேவையின் நிறைவு நிகழ்வானது 24/02/2022ஆம் திகதி வவுனியா மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண கலாச்சாரத் திணைக்களம் மற்றும் வவுனியா மாவட்டச் செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பிரதம விருந்தினராக பங்கேற்றிருந்தார். வடக்கு மாகாண பிரதம செயலாளரினால் நடமாடும் சேவை தொடர்பான உரை நிகழ்த்தப்பட்டது அத்தோடு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் ஏனைய கலாச்சார நிகழ்வுகளுடன் நடமாடும் சேவை இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள மற்றும் ஏனைய அலுவலர்களும் பங்கேற்றிருந்தனர்.