விவசாயத் துறையை நவீனமயப்படுத்தல்

அதிமேதகு ஜனாதிபதியின் ‘சுபிட்சத்தின் நோக்கு’ என்ற கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விவசாயத்துறையை நவீனமயப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல், வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் ௦2-12-2௦2௦ ஆம் திகதி  இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், மாகாண விவசாய பணிப்பாளர், விவசாய பிரதிப் பணிப்பாளர், விவசாய பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கமநல திணைக்கள உதவி ஆணையாளர் மற்றும் விவசாய துறைசார் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது விவசாயத்துறையில் நவீனமயமாக்கலில் மேற்கொள்ளபட்ட செயற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளால் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. குறிப்பாக விவசாயிகளுக்கென தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ள அடையாள அட்டை, விவசாய நிலங்களை இலகுவில் அடையாளம் காணும் முறை, நீர்நிலை அமைப்புகள் தொடர்பான அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்டு மையப்படுத்தி இற்றைபடுத்தி கையாளும் முறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்கூறப்பட்ட முறைகள் மிகவும் சிறந்த நவீன தொழில்நுட்ப முறைகளை கொண்டதாக உள்ளது என தனது பாராட்டை தெரிவித்ததுடன், மேலும் சில நுட்பங்களையும் உட்புகுத்த ஆலோசனை வழங்கினார். இத்திட்ட செயற்பாடுகளை எவ்வாறு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லல், மற்றும் விவசாயிகளே இத்திட்ட செயற்பாடுகளில் தமது நாளாந்த விவசாய தகவல்களை இற்றைபடுத்தி அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துதல், மண்ணின் தன்மையை அளவிட்டு அதற்கேற்ப விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குதல் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

மேலும் பாரம்பரிய முறைகளை தவிர்த்து கிடைக்கும் வளங்களை கொண்டு நவீன தொழில்நுட்பங்களை உட்புகுத்தி உற்பத்தியை அதிகரிக்கும் வழிவகைகளை மேற்கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டது.

அத்துடன் விவசாயத்துறைக்கு கிடைத்த நிதி ஒதுக்கீடு மற்றும் அடுத்த வருடத்திற்கான திட்டங்கள் தொடர்பாகவும் கௌரவ ஆளுநர் அவர்களால் வினவப்பட்டது. மேலும் விவசாய நவீனமயமாக்கலில் பல்கலைக்கழக துறைசார் அதிகாரிகளை இணைத்து அவர்களின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பாக திட்டமொன்றை தயாரித்து சமர்ப்பிக்கவும், ‘ஒரு வங்கிக்கு – ஒரு விவசாய கிராமம்’ என்ற ரீதியில் ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட விடயங்களை விரைவாக செயற்படுத்தவும் மாகாண விவசாய பணிப்பாளருக்கு தெரிவித்தார்.