விதை உற்பத்திக்காக இயந்திரம் மூலம் நாற்று நடப்பட்ட நெல் வயலில் வயல் விழா

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொல்லவிளாங்குளம் எனும் கிராமத்தில் வ.பிறேமச்சந்திரன், அ.தர்மகுலசிங்கம் ஆகிய இரு விவசாயிகள் கூட்டாக இணைந்து 2 ஏக்கரில் நாற்று நடுகை மூலம் விதை உற்பத்தி மேற்கொண்ட வயலில் விவசாயப் போதனாசிரியர் கி.கீர்த்திகன் அவர்களின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தலைமையில் 07.02.2020 வயல் விழா நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் மற்றும் பிரதிப் பணிப்பாளர், விதைகள் மற்றும் நடுகைப் பொருள் எஸ்.சதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பெரும்பாக உத்தியோகத்தர் பாண்டியன் குளம் கமநல சேவைகள் பிரிவு, புள்ளி விபரத் திணைக்களத்தின் தரவு சேகரிக்கும் உத்தியோகத்தர், நீர்ப்பாசனத் திணைக்களத்தினைச் சார்ந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு பிரதி மகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினைச் சார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் கொல்லவிளாங்குளம் கிராமத்தினைச் சார்ந்த விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பூ.உகநாதன் அவர்கள் தனது தலைமையுரையில் நாற்று நடுகை இயந்திரம் மூலமான நாற்று நடுகையினை மேற்கொள்வதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் தொடர்பாக விளக்கமளித்தார். நாற்று நடுகையினை மேற்கொள்ள ஏக்கருக்கு 11kg விதை நெல் போதுமானது எனவும் நாற்று நடுகை மேற்கொள்வதனால் ஏக்கருக்கு ரூபா. 3000.00 விதை நெல் செலவை மீதப்படுத்தலாம் எனவும் கூறினார். களைக் கட்டுப்பாட்டிற்காக 2 தடவைகள் தாழ்நில வலுக்களைகட்டியினை இவ் விவசாயிகள் உபயோகித்ததனால் களை நாசினிக்கான செலவு மீதப்படுத்தப்பட்டதுடன் சூழல் நேசமானதாகவும் காணப்படுகிறது. அத்துடன் எமது விவசாய நடவடிக்கைகள் சந்தையை நோக்கிய உற்பத்தியினை நோக்கமாகக் கொண்டிருப்பின் அதிக இலாபத்தினை ஈட்டலாம். நெல் அறுவடையின் பின் வயலிலுள்ள ஈரத்தினைப் பயன்படுத்தி இடைப் போகப் பயிர்ச் செய்கையாக குறைந்த நீர்த் தேவையுடைய பயிர்களான பயறு, உழுந்து, கௌபி என்பவற்றினைப் பயிரிடலாம் எனவும் நீர்ப்பாசனத்தினை மேற்கொள்ள Rain Gun Spray இனை உபயோகிக்கலாம் எனவும் கூறினார். இவ்வாறு இடைப்போகப் பயிராக அவரையினப் பயிர்களினைப் பயிரிடுவதனால் மண் வளம் அதிகரிக்கப்பட்டு அடுத்த போக நெற் செய்கையில் கூடிய விளைச்சலினைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறினார்.

மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் தனது உரையில் நாற்று நடும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டு வினைத்திறனான களைக் கட்டுப்பாடு, வினைத்திறனான நீர்ப்பாவனை என்பவற்றின் மூலம் புதிய தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதனால் குறைந்த நிலப்பரப்பில் அதிக விளைச்சலைப் பெற முடியும். எனவே குறைவான நிலப்பரப்பில் நெற்செய்கையினை மேற்கொண்டு ஏனைய பயிர்ச்செய்கைகளையும் மேற்கொள்ள முடியும் எனவும் நாற்று நடும் கருவி மூலம் நாற்று நடுகை மேற்கொள்ளப்படுவதனால் சீரான பயிரடர்த்தி பேணப்படுவதனால் நோய் பீடைத் தாக்கங்கள் குறைவாகக் காணப்படும் எனவும் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்ட பாடவிதான உத்தியோகத்தர (நெல்) பு.நிறோஜன் தனது உரையில் இவ் வயற்துண்டமானது தரமான விதை உற்பத்தி மற்றும் நாற்று நடுகை ஆகிய 2 நோக்கங்களிற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது எனவும் விவசாயத் திணைக்களமானது தரமான விதை உற்பத்தியினை விவசாயிகள் மத்தியில் பிரபல்யப்படுத்தவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

பிரதிப் பணிப்பாளர், விதைகள் மற்றும் நடுகைப் பொருள் எஸ்.சதீஸ்வரன் அவர்கள் விதை உற்பத்தியை நோக்கமாகக் கொண்ட நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்வதனைப் பாராட்டியதுடன் விதை அத்தாட்சிப்படுத்தல் சேவையினூடாக விதை நெல்லிற்கான சுட்டியிடலினை மேற்கொண்டு விதை நெல் தேவைக்காக விற்பனை செய்வதை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததுடன் விதை நெல் உற்பத்தியில் ஈடுபடும் பெரும்பாலான விவசாயிகள் விதை அத்தாட்சிப்படுத்தல் சேவையினால் சுட்டியிடல் மேற்கொள்ளப்படும் வரை காத்திருக்காமல் விற்பனை செய்வதைச் சுட்டிக்காட்டியதுடன் நெல்லை சேமித்து சுட்டியிடப்பட்டு விதை நெல்லாக விற்பதனால் அதிகளவு வருமானத்தினைப் பெற முடியும் எனவும் கூறினார்.

கமநல அபிவிருத்தி வங்கியால் விதை நெல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 1 ஏக்கர் விதை நெல் உற்பத்திக்கு ரூபா. 50,000.00 வழங்கப்படுவதுடன் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட சுட்டியிடப்பட்ட விதை நெல்லினை கமநல அபிவிருத்தி நிலையத்தினால் கொள்வனவு செய்யப்படும் எனவும் பாண்டியன்குள கமநல அபிவிருத்திநிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. நாற்று நடுகை மற்றும் விதை நெல் உற்பத்தியில் ஈடுபட்ட விவசாயி அ.தர்மகுலசிங்கம் அவர்கள் தனது கருத்துகளினைப் பகிர்ந்து கொண்டார். புதிய தொழில்நுட்பங்களை பரீட்சார்த்தமாக மேற்கொள்வதில் தனக்குள்ள ஆர்வத்தின் காரணமாக நாற்று நடுகை இயந்திரம் மூலம் நாற்று நடுகை மேற்கொண்டதுடன் விதை நெல் உற்பத்தியிலும் ஈடுபட்டதாகாக் குறிப்பிட்டார். நாற்று நடுகை இயந்திரத்தின் உதவியுடன் BW367 விதை நெல்லினை உபயோகித்து நாற்றுநடுகை மேற்கொண்டதாகவும் தாழ் நிலவலுக்களைகட்டியின் உதவியுடன் களையகற்றல் மேற்கொண்டதாகவும் இம் முறை வினைத்திறனாகக் காணப்பட்டதாகவும் தெரிவித்தார். அத்துடன் எரிபந்தம் நோய்த் தாக்கம் காணப்படவில்லை எனவும் தெரிவித்தார். இயந்திரம் மூலமான நாற்று நடுகை செயற்பாடானது மிகவும் வினைத்திறனாகக் காணப்பட்ட போதிலும் நாற்று நடும் இயந்திரத்தை சீரான முறையில் இயக்கக் கூடிய தேர்ச்சியாளர் பற்றாக்குறை இத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதில் ஓர் குறைபாடெனவும் நாற்று நடுகை இயந்திரத்தை இயக்குவதற்கான பயிற்சிகளை இளைஞர்களுக்கு வழங்குவதால் விவசாயிகள் ஆர்வத்துடன் நாற்று நடுகையில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவித்தார். பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வன்னி மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்கள் எமது விவசாயிகளின் பொருளாதார நிலை உயர்வடைய உரிய நவீன தொழில்நுட்பங்களை கையாண்டு சந்தை நிலவரம் அறிந்து உற்பத்தியினை மேற்கொள்ள வேண்டுமெனக் கூறினார்.