வரிசை விதைப்பிலான நெற்செய்கையின் அறுவடை விழா

யாழ் மாவட்டத்தில் உடுவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் வரிசை விதைப்பிலான நெற்செய்கையின் அறுவடை விழாவானது 09.02.2021 ஆம் திகதி  நடை பெற்றது.

இந் நிகழ்வில் வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன், பாடவிதான உத்தியோகத்தர், விவசாயப் போதனாசிரியர், மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள்,கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், மருதனார்மட விவசாயக்கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

விதையிடும் கருவியை பயன்படுத்தி நெல்லை வரிசையில் விதைத்து பயிர்செய்கை மேற்கொள்வதன் மூலம் சீரான பயிர் அடர்த்தி பேணப்பட்டு கூடுதலான மட்டங்கள் உருவாக்கப்படுவதனால் விளைச்சலும் அதிகரிக்கப்படுகின்றது. போதியளவு காற்றோட்டம், மற்றும் நோய், பீடை முகாமைத்துவம் செய்வதும் குறைக்கப்படுகின்றது என விவசாய போதனாசிரியரினால் பரீட்சார்த்த முறையின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட வட மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் பொருத்தமான இயந்திரங்களின் பயன்பாடு தொழிலாளர் குறைப்பது மட்டுமன்றி உற்பத்தி திறனையும் அதிகரிக்க உதவும் எனவும் பயிர்களுக்கு சரியான முறையில் பசளை முகாமைத்துவம் செய்வதுடன் சேதனப்பசளை பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இடை போக பயிர்ச்செய்கையாக தானிய பயிர்ச்செய்கை மேற்கொள்ள இருக்கும் விவசாயிகளுக்கு விதைகளை பெற்றுக்கொள்வதில் சிரமம் காணப்படின் தங்கள் பிரதேச விவசாயப்போதனாசியருக்கு விதை தேவைகளின் விபரங்களை தெரியப்படுத்துமிடத்து விதைகளை பெற்று கொள்வதற்கு விதை மற்றும் நடுகை பொருட்கள் அத்தாட்சிபடுத்தும் நிலையத்தினூடாக ஒழுங்கு செய்து தரப்படும் என தெரிவித்தார்.