வட மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையிலான விசேட ஊடக மாநாடு 29.9.2021

வட மாகாணத்தில் கடந்த இரு வருட காலப்பகுதியில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தின் அடிப்படையிலும் கௌரவ பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழும் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஊடகங்களுக்கும் மக்களுக்குமான அறிவித்தலை வழங்கும் நோக்கில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி. எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களினால் கடந்த புதன் கிழமை (29 .9 .2021 ) மதியம் வடமாகாண ஆளுநர் செயலகத்திலிருந்து மெய்நிகர் இணையவழி தொழில்நுட்பம் ஊடாக விசேட ஊடக மாநாடு இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வட மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்கள், கடந்த வாரம் வெளியிடப்பட்ட க.பொ.தா சாதாரண தர முடிவுகள் தொடர்பில் தெரிவிக்கையில் பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படாது ழடெiநெ மூலம் முழுமையாக கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்றமையையும், ழுடெiநெ மூலம் கல்வியை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கும் வட மாகாண கல்விச்சமூகம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமையையும் சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள், அதன் வெளியீடாக சராசரியாக 72 வீதமான பெறுபேற்றை அடைந்ததாக தெரிவித்தார். அவற்றிலும் கிராமப்புறங்களில் குறிப்பாக துணுக்காய் ,கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட மடு வலயம் மற்றும் வவுனியா மாவட்ட நெடுங்கேணி பகுதிகளில் மாணவர்கள் கணிதம், ஆங்கிலம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் மிகத் திறமையான சித்தியை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

அந்த வகையில் 67.65% சித்தியை கணித பாடத்திலும் , 62 % சித்தியை விஞ்ஞான பாடத்திலும் , 57 % ஆன சித்தியை ஆங்கில பாடத்திலும் பெற்றுள்ளதாக தெரிவித்தார் . மேலும் அழகியல் பாட முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் சராசரியாக 72 % ஆனவர்கள் க.பொ.தா உயர் தரத்திற்கு தகுதி பெற்று இருப்பதாக குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள் மாகாண ரீதியான தகமை வகைப்படுத்தல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த வருட க.பொ.தா உயர்தர முடிவுகள் பற்றி கருத்து தெரிவிக்கையில், அகில இலங்கை ரீதியாக வடமாகாணம் 9வது இடத்தில் இருந்து 6வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாகவும், இதற்கான அர்ப்பணிப்பான சேவை வழங்கலில் ஒத்துழைப்பு வழங்கிய கல்விசார் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார் . இத்துடன் நின்று விடாது வடமாகாணத்தின் கல்வி வளர்ச்சி முன்னிலை பெற வேண்டும் எனவும் அதற்காக மாணவர்களின் உள ஆற்றல் மற்றும் வாழ்க்கை முறை என்பவற்றை முன்கொண்டு செல்ல சமூக ஊடகங்கள் , இலத்திரனியல் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மாணவர்களுக்கான வழிகாட்டிகளாக அறிவியல் விடயங்களை வெளியிட்டு அவர்களை நெறிப்படுத்த ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானதென தெரிவித்தார். இவற்றைவிட வடமாகாணத்தில் கல்வித்துறையில் காணப்பட்ட ஆளணி பற்றாக் குறைகள் பெருமளவில் நிரப்பப்பட்டதாக தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் குறிப்பாக கணிதம், ஆங்கிலம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் ஆசிரியர் நியமனங்களை வழங்கி கிராமப்புறம் தொடக்கம் சகல இடங்களிலும் ஆளணி வெற்றிடம் சீர் செய்யப்பட்டதாக தெரிவித்தார். அத்துடன் புதிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டதுடன் அவர்கள் புதிய உத்வேகத்துடன் கடமையாற்றி வருவதாக தெரிவித்தார். அதேபோன்று கிராமப்புறங்களில் காணப்பட்ட வளப்பற்றாக்குறைகளை ஆய்வு செய்து அவற்றை நிவர்த்தி செய்து வருவதாகவும் அந்த வகையில் இவ்வாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் 80 வீதமான நிதியை பயன்படுத்தும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாயத்துறை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், கடந்த வருடம் சிறுபோக காலத்தில் நெற்செய்கையில் எதிர்பார்க்கப்பட்டளவு 100 % சதவீத இலக்கை அடைந்துள்ளதாக தெரிவித்தார். அதேபோன்று உழுந்து போன்ற உப உணவு செய்கையில் 90 % உம் , மரக்கறி செய்கையில் 96 % உம் , கிழங்கு செய்கையில் 50 % ஆன இலக்கை அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இதனைவிட விவசாயிகளின் மிக முக்கிய தேவையான களஞ்சிய வசதிகளிற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 மெற்றிக் தொன் பெறுமதியான பொருட்களை சேமித்து வைக்கும் களஞ்சிய சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். அதேபோன்று வட மாகாணத்தில் 100 மில்லியன் பெறுமதியான 10 களஞ்சிய சாலைகள் ஐந்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு வருவதாகவும் இங்கு ஏறக்குறைய 870 மெட்ரிக் தொன் பொருட்களை களஞ்சியப்படுத்தும் வசதியை ஏற்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் வடமாகாண விவசாய பணிமனை அலுவலகத்தை மாங்குளம் பகுதியில் அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டு நிர்மாண வேலைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்ததுடன் வடமாகாண விவசாய நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் மிக முக்கியமான இடங்களாக காணப்படுகின்றமையால் அதனை மையப்படுத்தி விவசாய பணிமனையை மாங்குளம் பகுதிக்கு நகர்த்தியதாகவும் , விவசாயிகள் இதன் மூலம் தமது செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார் .

மேலும் அதிமேதகு ஜனாதிபதியின் சேதனப் பசளை உற்பத்தி செயற்பாட்டிற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளதாகவும் இந்நிதியை வடமாகாண விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்கள் விவசாய கழகங்களால் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இம்மூன்று மாத காலப்பகுதியில் 100% இலக்கை அடையும் பொருட்டு விவசாயிகளுக்கான உபகரணம் மற்றும் கட்டட வசதிகளுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

எனவே பாதுகாப்பான மற்றும் கூடிய விளைச்சலைப் பெற்றுக் கொள்ளும் வகையில் விவசாயிகள் தமது வீடுகளில் சேதனப் பசளை உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது .
அத்துடன் மிக முக்கியமான விவசாய நடவடிக்கையான கால்நடை திணைக்கள நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் , 40 %ஆன ஆளணியினர் இத்துறை தொடர்பில் உள்ளீர்க்கப்பட்டுள்ளதாகவும் , கால்நடை திணைக்களத்தில் ஒவ்வொரு மாதமும் குஞ்சுகளை உற்பத்தி செய்வதற்காக புதிய இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்து அதன் மூலம் மாதாந்தம் குஞ்சு உற்பத்தியின் அளவை கூடுதலாக 5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேபோல மன்னார் மாவட்டத்தில் புதிய கட்டடங்கள் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்ததுடன் , பால் உற்பத்தியைப் பொருத்தவரை பாலின் விலை 60 ரூபாயிலிருந்து 65 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் கால்நடை வளர்ப்போரால் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்ட மேய்ச்சல் தரை இல்லாத பிரச்சனைக்கு தீர்வாக கௌரவ அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் கலந்துரையாடியதன் பயனாக அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டு 2900 ஏக்கர் நிலப்பரப்பு வனவள திணைக்களத்திடம் இருந்து கால்நடை மேய்ச்சல் தரைக்காக அவர்களின் சம்மதத்துடன் விடுவிக்கப்பட்டுள்ளது . இந் நிலப்பரப்பை கால்நடைகளுக்கு பயனுள்ள வகையில் மாற்றியமைக்கும் விதத்தில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது . அத்துடன் கால்நடை திணைக்கள பணிமனையும் மாங்குளம் பகுதியில் அமைப்பதற்கான திட்டம் அனுமதி வழங்கப்பட்டு ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார் .

அந்த வகையில் விவசாயம மற்றும் கால்நடை போன்ற நடவடிக்கைகளுக்காக மக்களை தேடி வரும் நிலையை மாற்றி அமைத்து பரந்துபட்ட அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு பல திணைக்களங்கள் வடமாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மாற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் 2200 மில்லியன் திட்டம் நிறைவுபடுத்தபட்டுள்ளதாகவும் அதேபோன்று இரணைமடுக்குள அபிவிருத்தி திட்ட 3200 மில்லியன் திட்டம் நிறைவு பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார் .
இதனை விட மிக முக்கியமான 03 திட்டங்களை அடையாளம் கண்டு திறைசேரியுடன் கலந்துரையாடி நிதியைப் பெற்று இருப்பதாக தெரிவித்தார் . மேலும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இவ் வருடத்தில் 84 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு திட்டத்தில் 2200 மில்லியன் ரூபா செயற்திட்டம் நிறைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மிகுதியாகவுள்ள 80 திட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இதில் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் கைவிடப்பட்ட மிகமுக்கியமான கூறாய் நீர்ப்பாசனத் திட்டத்திற்காக 150 மில்லியன் நிதி நேரடியாக திறைசேரி மூலம் வழங்கப்பட்டு குறித்த கூறாய் திட்டம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றது . இதனை விட மிக முக்கியமாக யாழ்குடா நாட்டில் காணப்படும் நீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இரணைமடு குளத்தினூடாக நீரைப் பெற அரசு முயற்சி செய்த போதும், அதற்கான தீர்வு காணப்படாத காரணத்தால் மேன்மை தங்கிய ஜனாதிபதியின் விஷேட அனுமதியுடனும் முழுமையான ஆதரவை வழங்கிய பிரதம அமைச்சரின் அனுமதியுடனும் யாழ்ப்பாணத்திற்குரிய நீர் வழங்கல் திட்டம் தற்போது அனுமதிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுவதாக தெரிவித்தார் .இதில் 3 லட்சம் பயனாளிகள் நன்மை பெற உள்ளதாகவும் இதற்காக 266 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 6ஆம் திகதி தாளையடியில் சம்பிரதாயபூர்வமாக இத்திட்டத்தை கௌரவ பிரதம அமைச்சர் அவர்கள் அலரிமாளிகையில் இருந்து ஆரம்பித்து வைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மாகாண சபைக்கு உட்பட்ட வகையில் மிகக் குறைந்தளவு வீட்டுத்திட்டங்களே நடைமுறைக்கு வருவதாக தெரிவித்ததுடன் கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 59 வீடுகள் 100% பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் , மேலும் கொவிட் -19 சம்பந்தமாக அரச உத்தியோகத்தர்கள் இடம் இருந்து சேகரிக்கப்பட்ட நிதியிலிருந்து மிகவும் பாதிக்கப்பட்ட 18 குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய நிதியை பகிர்ந்த அளித்ததாகவும் அவற்றில் 75 சதவீதமான வேலைகள் முடிவடைந்து உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் PSDG ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியிலிருந்து 26 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு 90 சதவீதமான பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 18,000 மில்லியன் ரூபாய்க்குரிய நிதியில் அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது, இதில் முக்கியமாக திட்டங்கள் யாழ் நகரை நோக்கியதாகவும் அதேபோன்று மன்னார், வவுனியா ,முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற நகரை நோக்கிய திட்டங்களும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டதுடன் இவை பற்றிய விபரங்கள் பின்னர் வழங்கமுடியும் எனவும் கௌரவ ஆளுநரால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சுகாதாரத்துறை அபிவிருத்தி தொடர்பில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட நிதியின் ஊடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மாவட்டங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அத்துடன் நேரடியாக மாகாணசபை வைத்தியசாலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதி மற்றும் உபகரண வசதிகளையும் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீட்டில் ஆரம்ப வைத்தியசாலைகளுக்கான உட்கட்டுமான வசதிகளையும் வழங்கி உள்ளதாக தெரிவித்தார் .
மேலும் நீண்ட காலமாக காணப்பட்ட வைத்தியர் ஆளணி குறைபாட்டை மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் கௌரவ சுகாதார அமைச்சருடனான நேரடியாக கலந்துரையாடலின் ஊடாக ஓரளவு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் , எதிர்வரும் மாதத்தில் இப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காணப்படுமெனவும் தெரிவித்தார் . அதாவது 280 வைத்தியர்களுக்குரிய ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் வட மாகாணத்தில் சமூகப்பாதுகாப்பு இளைஞர்கள் சம்பந்தமாக விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், இளைஞர் பாதுகாப்பு ,மொழி அபிவிருத்தி ,தொழிற்பயிற்சி , பாடசாலைகளில் இருந்து இடைவிலகியவர்கள் மீண்டும் பாடசாலைகளில் இணைத்தல் மற்றும் அவர்களுக்கான தொழிற் பயிற்சிகளை வழங்கும் செயற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார் .

அத்துடன் முல்லைத்தீவு மற்றும் மன்னார் வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தினை இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தற்போது சுகாதார அமைச்சின் ஊடாக குறித்த கட்டடங்களை கட்டுவதற்கான கோரிக்கையை இந்திய அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார். இதனை செய்து வருவதாக சுகாதார அமைச்சிற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதி அளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார் . இவை தவிர பாதிக்கப்பட்டு பெண்களை தலைமைத்துவமாக கொண்ட 65,000 குடும்பங்களை அடையாளப்படுத்தி அவர்கள் சம்பந்தமான விபரத்திரட்டு தயாரிக்கப்பட்டு கொண்டிருப்பதாகவும் , இவர்களுக்காக வழங்கப்பட வேண்டிய வாழ்வியல் சம்பந்தமான உதவிகள் பற்றி உரிய அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார் .

கடந்த வாரத்தில் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்கள் அனைத்து மாகாண ஆளுநர்களையும் சந்தித்து கலந்துரையாடிய போது மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு தெரிவித்தமையை குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள், வாழ்வாதாரத்தை முன்னுரிமை அளிக்கும் குடும்பங்களை முன்னுரிமைப்படுத்தி 65,000 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வியலுக்கு உதவும் வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறாக ஒரு பாரிய அபிவிருத்தியை கடந்த காலத்தில் வட மாகாணத்தில் ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்தின் அடிப்படையில் கல்வி ,சுகாதாரம் ,நீர்ப்பாசனம் ,விவசாயம் மற்றும் கால்நடை அபிவிருத்தி என்ற வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் உட்கட்டமைப்பு நகர அபிவிருத்தி ஊடாக பேரூந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விதமாக அடிப்படை தேவைகளை நகர அபிவிருத்தி சபை தமது திட்டங்கள் மூலம் நிறைவேற்றி வருகின்றது .

இவற்றுடன் இணைந்த வகையில் சுற்றுலா மையங்கள் தொடர்பாகவும் அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், மத்திய அரசாங்கத்துடன் இணைந்து எவ்வாறு சுற்றுலாத்துறையை முன்னேற்ற முடியும் எனவும் மக்களின் வாழ்வியலுக்கு சுற்றுலா எவ்வாறு ஆதரவு தரமுடியும் என்ற வகையிலும் இவ்விடய திட்டத்தை வகுத்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே எதிர்வரும் ஆண்டில் வட மாகாணத்திற்கு ஒதுக்கப்படும் நிதிகள் பொதுவாக மக்களின் அடிப்படைத் தேவைகளையும் ,அவர்களின் வாழ்வாதாரத்தையும் நோக்கி பயன்படுத்தும் வகையில் அமையுமெனவும் குறிப்பிட்டார். அத்துடன் பொதுமக்களிடம் தமது கருத்துக்களை மின்னஞ்சல் அல்லது கடிதம் மூலமாக தெரிவிக்கவும் சந்தர்ப்பம் உள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர் அவர்கள், மக்களுக்கு உதவுவதற்கு அல்லது உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வுகாண எந்நேரத்திலும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.