வடமாகாண விவசாய திணைக்கள பிரச்சினை – விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை – ஆளுநர்

கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற வடமாகாண விவசாய திணைக்கள கணக்காய்வு கூட்டத்தின்போது ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளரை ஆளுநர் பணித்திருந்ததுடன் அந்த அறிக்கை தற்போது ஆளுநருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள கௌரவ ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த சம்பவத்தில் சிறுபான்மை இன பெண் அதிகாரியொருவர் தாக்கப்பட்டதனை வன்மையாக கண்டிக்கும் ஆளுநர் அவர்கள் இவ்வாறான சம்பவங்கள் இனி வடமாகாணத்தில் இடம்பெறாத வகையில் முன்னெடுக்க கூடியதான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை போராட்டங்கள் ஊர்வலங்களை மேற்கொண்டு தன்மீது எவரும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது எனவும்குறிப்பிட்டதுடன் பொதுமக்களுக்கு சேவையினை வழங்கவேண்டிய அலுவல நேரத்தில் அரச உத்தியோகர்கள் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டதுடன் அலுவலக நேரத்தில் முறையான விதிமுறைகளை கடைப்பிடிக்காது ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களில் ஈடுபடும் வடமாகாண நிர்வாகத்திற்கு உட்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

-வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு