வடமாகாண நவராத்திரி விழா – 2023

Casino Bonus Review - How Good is It in 2023?

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகுடன் கல்வி அமைச்சின் நலன்புரிச்சங்கம் மற்றும் யாழ் வலயக்கல்வி அலுவலக நலன்புரிச்சங்கம் என்பன இணைந்து நடாத்திய வட மாகாண நவராத்திரி விழாவானது 2023.10.15 – 2023.10.23 வரை தினமும் ஒன்பது நாட்கள் நடைபெற்றது. பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரனையுடன் இறுதி நாளாகிய விஜயதசமி விழாவானது 2023.10.24 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணியளவில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உயர்திரு.ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் கல்வி அமைச்சின் சரஸ்வதி சிலை முன்றலில் நடைபெற்றது.
ஆலய வழிபாட்டுடன் நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.சி.ரமணராஜா அவர்களால் மிகவும் சிறப்பான ஆன்மீக சொற்பொழிவானது ஆற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரியாலை பிருந்தாவனம் கலாமன்ற மாணவர்களின் குழு நடனமும், காவடி நடனமும், நல்லூர் சாரங்கா இசைமன்ற மாணவர்களின் பக்தி கீத இசை நிகழ்வூம் விழாவினை மெருகூட்டிச் சிறப்பித்தன.
நிகழ்வின் தொடர்ச்சியாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உயர்திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களால் ஏடு தொடக்குதல் வைபவம் சிறப்பாக நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சின் நலன்புரிச்சங்கத்தினால் நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தியோகத்தர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற உத்தியோகத்தர்களுக்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. பரிசில்களை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வலயக்கல்விப் பணிப்பாளர், கல்வி அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர், உதவிக்கல்விப்பணிப்பாளர், உதவிச்செயலாளர், மற்றும் மாகாணக்கல்வித் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர்.
தொடர்ந்து கலாவித்தகர் கே.தனேந்தினி, கலாவித்தகர் க.சிவகுமார், மற்றும் ரி.ஜெஸ்லின் ஆகியோரினால் நிகழ்த்தப்பட்ட வாத்திய இசை நிகழ்வானது பார்வையாளர்களை மிகவும் பக்திப்பரவசத்தில் ஆழ்த்திச்சென்றது. விழாவின் இறுதி நிகழ்வாக பண்பாட்டலுவல்கள் அலகின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.இ.பத்மராணி அவர்களால் நன்றியுரை நடாத்தப்பட்டதுடன் தொடர்ந்து மகேஸ்வர பூஜையுடன் நிகழ்வானது பி.ப 1.00 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது.