வடமாகாணத்தில் உள்வாங்கப்படும் மின்காற்றாலை திட்டம் தொடர்பிலான சுற்றுச்சூழல் சமுதாய தாக்கங்கள் மற்றும் நன்மைகள் தொடர்பிலான அறிக்கை வடமாகாண சபையின் இணையத்தளத்தில் மக்களின் பார்வைக்காக பதிவேற்றப்படல் வேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.
ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் மறவன்புலவு பிரதேச மக்களின் பிரதிநிதிகள் , இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் , நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 24 செப்ரெம்பர் 2019 அன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் ஆளுநர் அவர்கள் காணொளி தொடர்பாடலின் மூலம் உரையாற்றினார். இதன்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்கள் குடியிருப்பு பகுதிகள் அல்லாத கேரதீவு முதல் தனங்கிழப்பு வரையான பகுதிகளில் இந்த காற்றாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மறவன்புல மக்களின் பிரதிநிதிகள் ஆளுநர் அவர்களைக் கேட்டுக்கொண்டனர்.
இதுதொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளில் மீறப்பட்ட விடயங்கள் தொடர்பில் பிரதேச செயலகம் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முதல் தெரிவிக்கவேண்டும் என்று ஆளுநர் அவர்கள் பிரதேச செயலாளரிடம் குறிப்பிட்டார்.
மேலும் இந்த திட்டத்தில் விஞ்ஞானரீதியான நன்மைகள் , அரசியலமைப்பு ஆய்வுக்குட்பட்ட நீதிகள் நியாயங்கள் அதாவது வடமாகாணம் வடமாகாண சபை மத்திய அரசு ஆகியவற்றில் யார் யாரிடம் அனுமதிகள் எடுக்கப்படல் வேண்டும் என்பதுடன் ஆவணத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்திற்கு மாறான நடவடிக்கைகள் எவை என்றும் ஆராயப்படல் வேண்டும் என்றும் ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கான அனுமதி எந்த எந்த இடங்களில் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் இதுவரை எங்கு அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் இவற்றில் மீறப்பட்ட விடயங்கள் தொடர்பில் கண்காணிக்கப்படவுள்ளது. முக்கியமாக இந்த திட்டத்தில் உள்ள சமூக பயன்கள் நன்மைகளுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் ஆளுநர் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.
மேலும் இது தொடர்பாக கண்காணிப்பதற்காக மக்கள் சார்பில் ஒருவரும் இலங்கை மின்சாரபை சார்பில் ஒருவரும் ஆளுநர் சார்பில் ஒருவருமாக மூவர் கொண்ட ஒரு குழுநியமிக்கப்படும் என்று கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.
இதன்போது இந்த மின்காற்றாலை அமைப்பதற்கு எதிராக மறவன்புலவு மக்களால் கையெழுத்திடப்பட்ட ஆவணம் ஆளுநரின் செயலாளரிடம் மறவன்புலவு மக்களின் பிரதிநிதியினால் வழங்கப்பட்டது. இதுதொடர்பிலான அடுத்தகட்ட கலந்துரையாடல் எதிர்வரும் அக்டோபர் 8ஆம் திகதி நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தின்போது இது தொடர்பிலான இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் என்றும் ஆளுநர் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் , நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் , சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர் , பிரதேச சபை தவிசாளர் , கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வள முகாமை திணைக்கள அதிகாரிகள் , மறவன்புலவு மக்கள் பிரதிநிதிகள், பொலிசார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு