வடக்கைபொருளாதாரத்தில் வலுவடைந்த மாகாணமாக மாற்றுவது ஜனாதிபதியின் இலக்காக உள்ளதெனவடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபன் ஆகியோரின் தலைமையில்  27/06/2024 நேற்று நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய கௌரவ ஆளுநர், மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார். தொழில் அற்றோர் பிரச்சினைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்வு திட்டங்கள் தொடர்பிலும், வாழ்வாதார உதவி திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட்டார். ஏனைய மாகாணங்களை போல வடக்கையும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாகாணமாக மாற்றுவதே ஜனாதிபதியின் ஆசை எனவும் கௌரவ ஆளுநர் குறிப்பிட்டார். இந்த திட்டத்திற்கு தேவையான அடிப்படை கட்டுமானங்களையும், வசதிகளையும் ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

பொருளாதார வலயங்களை ஸ்தாபிப்பதோடு, பலாலி விமான நிலைய சேவைகளையும், காங்கேசன்துறை துறைமுகத்தையும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறினார். இவ்வாறன திட்டங்கள் ஊடாக மாகாணத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்தி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் குறிப்பிட்டார்.