வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் 2023ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழாவானது கிளிநொச்சி மாவட்டத்தில் 2023-12-06 ஆம் நாள் புதன்கிழமை வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழாவும், பண்பாட்டியல் காண்பியக்கூட கண்காட்சியும் எனும் கருப்பொருளில் பண்பாட்டலுவல்கள் அலகினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இவ்விழாவானது பண்பாட்டு விழா, பண்பாட்டு ஊர்வலம், பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சி என மூன்று வகையாக கட்டமைக்கப்பட்டு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கூட்டுறவாளர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டுப் பெருவிழாவும் கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி மண்டபத்தில் பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சியும், கிளிநொச்சி காக்காகடைச் சந்தியிலிருந்து ஆரம்பமாகும் வகையில் பண்பாட்டு ஊர்வலமும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் காலை 9.00மணிக்கு விருந்தினர்கள் பிரசன்னமாக பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமாகி நிகழ்வுகள் யாவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றன.
பண்பாட்டு ஊர்வலமானது வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலை நிகழ்வுகளும், ஊர்திகளும் வடிவமைக்கப்பட்டு வடமாகாணத்தில் வாழும் கலைஞர்களது பங்கேற்புடன் வடமாகாண பண்பாட்டினை எடுத்தியம்பும் வகையிலாக நடைபெற்றது.
இவ்வூர்வலத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலகங்களது ஊர்திகளும்இ கிளிநொச்சி மாவட்ட செயலக ஊர்தியும்இ கிளிநொச்சி மாவட்ட கல்வி வலயங்களான கிளிநொச்சி தெற்கு, கிளிநொச்சி வடக்கு ஆகிய இரு வலயங்களையும் உள்ளடக்கி மொத்தமாக ஏழு ஊர்திகள் வடக்கு மாகாண பண்பாட்டு விழுமியங்களைச் சித்தரிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட வாழ்வியல், தொல்லியல் அம்சங்களை உள்ளடக்கிய வகையில் ஏற்பாடு செய்து பங்கேற்றிருந்தனர். கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மயிலாட்டம், கோலாட்டம், சுளகு நடனம், கும்மி நடனம், வேப்பிலை நடனம், ஒயிலாட்டம், என்பவற்றுடன் யாழ்ப்பாணத்திலிருந்து புரவி நடனம், சிலம்பாட்டம், களிகம்பு நடனம் ஆகியவற்றுடன் முல்லைத்தீவிலிருந்து குடமுதற்கும்மி, வவுனியாவிலிருந்து சுளகு நடனம் வேடப்புனைவாளர்களது பங்கேற்புடன் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக பண்பாட்டு ஊர்வலம் நடைபெற்றது.
பண்பாட்டு ஊர்வல நிறைவில் திறன்விருத்தி மண்டபத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சியினை கல்வி அமைச்சின் செயலாளர் திரு ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரும் விழாவின் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்ட திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சியில் வடமாகாணத்தில் வாழ்கின்ற ஓவியக்கலை கலைஞர்களது படைப்புகளும், புழங்கு பொருள்கள் மற்றும் சிற்பம், வாழ்வியல் அடையாளங்களைப் புலப்படுத்தும் வகையிலான அரும்பொருள்கள்,அரிய வகையிலான நூல்கள் என்பன நேர்த்தியான முறையில் காட்சிக்கூடத்தில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமை அனைவராலும் பாராட்டப்பட்டது.
திறன்விருத்தி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சியினைத் தொடர்ந்து பண்பாட்டு விழா கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமரர் கலாபூஷணம் அப்பச்சி வல்லிபுரம் அரங்கிலே விருந்தினரால் தமிழ்த்தாய்க்கு மலர் மாலை அணிவித்து மங்கல விளக்கேற்றி கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து, மதத் தலைவர்களது ஆசியுடன் விழா இனிதே ஆரம்பமாகியது.
பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி.லாகினி நிருபராஷ் அவர்களின் வரவேற்பு உரையினை அடுத்து விழாவில் வடமாகாணத்தினைப் பிரதிபலிக்கும் வகையிலான கலை நிகழ்வுகளும் வடமாகாணத்தின் கலைக்குப் புகழளிக்கும் வகையில் பங்காற்றிய கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கான விருதுகளும் வழங்கி கௌரவிக்கும் முக்கிய நிகழ்வுகளும் நடைபெற்றன. கல்வி அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையுரைஇ சிறப்பு விருந்தினரான கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களது சிறப்பு விருந்தினர் உரை விழாவிற்கு மேலும் மெருகூட்டி அழகு சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேசத்து இளம் சிறார்களான தவில் நாதஸ்வரக் கலைஞர்களது மங்கல இசை, கண்டாவளை கலை ஒளி மன்றக் கலைஞர்களது வரவேற்பு நடனம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நடனத்துறையினரது பாரம்பரிய கலைச்சங்கமம், மன்னார் கலார்ப்பணம் வழங்கிய கிறிஸ்தவ நடனம், வவுனியா நேர்த அ(ப்)பி கலாமன்றத்தின் கண்டிய நடனம், கிளிநொச்சி தொழிற்பயிற்சி நிறுவனத்தின் விசேட தேவைக்குட்பட்ட கலைஞர்களது கிராமிய வாழ்வியல் நடனம், முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரி மாணவர்களது நாட்டாரிசை, வவுனியா பட்டானிச்சூடு முஸ்லிம் மகா வித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களது பிறைநடனம், மருதங்கேணி நாகதீப கலாமன்றம் வழங்கிய மீனவ நடனம், கிளிநொச்சி ஜானு அரங்காற்றுகையகம் வழங்கிய புத்தாக்க நடனம் ஆகிய கலைநிகழ்வுகளுடன் வடமாகாணத்தின் உயர்விருதான கலைக்குரிசில் விருது 13 மூத்த கலைஞர்களுக்கும்இ வடமாகாண இளங்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 13 இளங்கலைஞர் விருதும்,வடமாகாணத்தைச்சேர்ந்த படைப்பாளிகளால் 2022ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூல்களில் சிறந்தவையாக தெரிவு செய்யப்பட்ட நூல்களின் 13 நூலாசிரியர்களுக்கான வடமாகாண சிறந்த நூற்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவின் பண்பாட்டு மலராக வடந்தை நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. கல்வி அமைச்சின் செயலாளரால் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பிரதிகள் விழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரதிநிதிகளுக்கு சிறப்புப் பிரதிகளாக வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.மாலினி கிருஷ்ணானந்தன் அவர்களது நன்றியரையடன் வடமாகாண பண்பாட்டுப் பொருவிழாவானது மதியம் 02.00 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.