வடக்கு மாகாணத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தி

வட மாகாணத்தில் காற்று மற்றும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி ஆக்கக் கூடிய பசுமை ஆற்றல் உற்பத்திச் சாத்தியங்கள் மற்றும் அனுகூலங்களைப் பகிர்ந்து கொண்டு வட மாகாணத்தில் இது தொடர்பானவர்களை விழிப்பாக்கும் அறிவு பகிர்வு அமர்வினை 13 பெப்பிரவரி2020 அன்று யாழ்ப்பாணத்தில் இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகம் நடாத்தியது. இவ்வமர்வினை, வடக்கு மாகாணத்தின் ஆளுநர் திருமதி பி.எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆரம்பித்து வைத்தார்.
அவரது உரையில், மேற்கத்திய நாடுகளில் பெருவிருட்சமாயிருக்கும் பசுமை ஆற்றல் துறையினை மேற்கோள் காட்டியதோடு, எரிசக்தியின் விலையினைக் குறைப்பது, இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு ஏராளமான நன்மைகளைக் கொண்டுவரும் என்றார். ஏறக்குறைய சகலவிதமான பொருட்களின் விலைகளும் வீழ்ச்சியடையும், உற்பத்தி செலவு குறைவதன் காரணமாக முதலீட்டாளர்கள் ஈர்க்கப்படுவர், இறுதியில், சர்வதேச சந்தையில் நாட்டின் போட்டித்திறன் அதிகரிக்கும்.
மறுபுறமாக, இது எரிசக்தி உற்பத்திக்கான பெற்றோலிய பொருட்களின் இறக்குமதியினைக் குறைப்பதன் மூலம் அந்நிய செலாவணி வெளிப்பாய்ச்சல் குறைவடைய வசதிப்படுத்தும். ஒட்டுமொத்தத்தில் இந்த முயற்சி இலங்கை ரூபாயின் உள்ளக மற்றும் வெளியக உறுதிப்பாட்டைப் பேணுவதற்கு உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
இலங்கை மத்திய வங்கி, இலங்கை மின்சார சபை மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கூட்டிணைவில் உரிய நேரத்தில் இடம்பெறும் இந்த முயற்சியினை பாராட்டுகின்ற அதேவேளை, பசுமை ஆற்றல் துறைக்குத் தேவையான தொடர்ந்த ஆராய்ச்சி மற்றும் ஏனைய ஆதரவின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.