வடக்கு மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்க அரச அலுவலர்கள் அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – ஆளுநரின் செயலாளர்

போரிலிருந்து மீண்டுவந்திருக்கும் மாகாணமாக வட மாகாணம் காணப்படுவதால் இங்குள்ள மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்க வட மாகாணத்தின் அரச அலுவலர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென வட மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் அவர்கள் வட மாகாணத்தின் அரச அலுவலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

04 பெப்பிரவரி 2019 அன்று காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற 71ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஆளுநர் செயலக பணிக்குழாம் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

வட மாகாணத்தின் மக்கள் பாரிய பொருளாதார மற்றும் அபிவிருத்தி நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றமையால் இம்மக்களுடைய வாழ்வாதாரத்தினை அதிகரிப்பதனூடாக பொருளாதார ரீதியில் அவர்களை வலுவடையச் செய்வதற்கு கௌரவ ஆளுநர் அவர்கள் முன்னெடுக்கும் பணிகளில் வட மாகாணத்தின் அரச அலுவலர்கள் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஆளுநரின் செயலாளர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் உண்மையாகவே மக்களை சென்றடைவதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் காலி முகத்திடலில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில்  இடம்பெற்ற 71ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டார்.