வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினை ஜனாதிபதி திறந்து வைத்தார்

பேண்தகு கூட்டுறவு வங்கி முறைமையின் ஊடாக வடக்கு மாகாண மக்களின் பொருளாதார வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் கைதடி முதியோர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைமையகக் கட்டடம் 30.08.2019 வெள்ளிக்கிழமை வடக்குமாகாண ஆளுனர் கௌரவ கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் உத்தியோக பஸ்ரீர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அன்றைய தினம் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான 100 நாள் ஆரம்ப வேலைத் திட்டம் வெளியிட்டுவைக்கப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணசபையிலிருந்து ரூபா2.5 மில்லியன் வங்கிக்குரிய மூல நிதியாக மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களால் வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் 2013ஆம் ஆண்டிலிருந்து செயற்பாடுகள் நிறுத்தப்பட்ட CLCMS இன் வருமதியாகவுள்ள கடன் நிலுவை 41 மில்லியன் நிதி அறவீடும், சுழற்சியும் செய்வதற்கான பொறுப்பு நிதி மாற்றத்துடன் வங்கிக்கு வழங்கப்பட்டது. இந் நிதியும் வங்கியின் அங்கத்துவ சங்கங்களூடாக நடைமுறைப்படுத்தக் கூடிய நிதிப் பயன்பாட்டிற்குரிய மூல நிதியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வின் போது 2018 அரச பாதீட்டில் கைத்தொழிற்சாலைகள் நிறுவப்பட்ட மூன்று உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களிற்கு தொழிற்படு மூலதனக் கடன் வழங்கப்பட்டமை சிறப்பானதாகும். இந் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ.எம்.ஏ.சுமந்திரன், கௌரவ அங்கஜன் இராமநாதன், கௌரவ.காதர் மஸ்தான், யாழ் மாநகர சபை முதல்வர் திரு. இமானுவேல் ஆனோல்ட், வடக்கு மாகாணசபையின் மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சின் செயலாளர் திரு. இ.வரதீஸ்வரன் அவர்களும், திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.