வடக்கில் கோவிட் -19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவுசெய்தோருக்கு வடமாகாண ஆளுநர் பாரட்டு

வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50,000 சினோபோம் கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த புதன் கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் குறித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டமை பாராட்டுதலுக்குரியது என வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு உதவிய வடமாகாண சுகாதார செயலாளர், வடமாகாண சுகாதார பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள், வைத்திய அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உட்பட அனைத்து சுகாதார துறையினருக்கும் வட மாகாண காவல்துறையின் சிரேஸ்ட உதவி பொலிஸ்மா அதிபர் , உதவி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேசசபை செயலாளர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள் , வடமாகாண இராணுவத் தளபதி , இராணுவ மருத்துவத்துறை மற்றும் இராணுவத்தினர் மற்றும் வடமாகாண பிரதமசெயலாளர் உட்பட அனைத்து வட மாகாண உத்தியோகத்தர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டிருப்பினும் கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் சுகாதார துறையினரின் வழிகாட்டலுக்கு அமைவாக சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றி செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.