வடக்கிற்கு சரியான நேரத்தில் சரியானபருவத்தில் உரங்கள் வழங்கப்படும்

வடமாகாணத்தில் இவ்வருடம் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் உரங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் 2023.10.15 அன்று நடைபெற்ற விவசாயம் தொடர்பான கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் கூறியிருந்தார். வடமாகாணத்தில் நெற்செய்கைக்கு மட்டுமன்றி மரக்கறி, பழங்கள் உள்ளிட்ட பயிர்களுக்கும் விவசாய திணைக்களம் அதிகூடிய ஆதரவை வழங்கும் எனவும் விவசாய அமைச்சர் கூறினார்.  இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் நாட்டின் உள்நாட்டு உற்பத்திக்கு வடமாகாணத்தின் விவசாய செயற்பாடுகள் பெருமளவு பங்களிப்பதாகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், உடனடியாக தீர்க்கப்படக்கூடிய விடயங்கள் தொடர்பிலும் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியதுடன் ஏனைய பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியால் பயிர் சேதம் அடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு, விவசாய பாதுகாப்பு நிதி, உழவர் ஓய்வூதியம் ஆகியனவும் இந்நிகழ்விலே வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், வடமாகாண பிரதம செயலாளர் திரு.சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.