வடக்கின் உயிர்நாடியாக திகழும் சுற்றுலாத்துறை – வடமாகாண ஆளுநர்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் கௌரவ வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன்  ராகவன் அவர்கள் தலைமையில்      வடக்கின் உயிர்நாடியாக  திகழும் சுற்றுலா விடுதி உரிமையாளர்களுக்கான சந்தைப்படுத்தல் உபாயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் இன்று (31) யாழ் ரில்கோ விடுதியில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ,

சுயாதீனமாக இயங்கக் கூடிய ஒரே ஒரு மாகாணமாக வடமாகாணம் காணப்படுகின்றது. பொருளாதார ரீதியில் அதனை நாங்கள் அபிவிருத்தி அடையச் செய்வதன் ஊடாகவே எதிர்காலத்தில் எமது சமூகத்தினையும் அபிவிருத்தி அடையச் செய்ய முடியும் என தெரிவித்தார்.

மேலும் வட மாகாணத்தின் உயிர் நாடியாகவும் இரத்த நாளங்களாகவும்  முதலீடு செய்யும் ஹோட்டல் நிர்வாகிகளை நான் வரவேற்பதோடு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கை ஒரு சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தளமாக  காணப்படுகின்றது .குறிப்பாக ஒவ்வொரு இரண்டு மணி நேர போக்குவரத்துக்கு பின்னர் புதுமைகளை உணரக் கூடியதாகவும் ஒரு உல்லாசப் பயணி குளிரில் இருந்து வெப்பத்திற்கும் வெப்பத்திலிருந்து குளிர் பிரதேசத்திற்கும் ,கடல் வளம் ,இயற்கை வளம் ,காடுகள் ,மலைகள், ஏரிகள் ,இயற்கை உற்பத்தி நிலையங்கள்போன்றவற்றினை இரண்டு மணித்தியால இடைவெளிகளில் உணரக்கூடியதாக இருப்பது எமது இலங்கையின்  சிறப்பம்சமாகும் எனவும் குறிப்பிட்டார்.

எமது பிரதேசத்தில் சுற்றுலா துறையினை விருத்தி செய்து அதனூடாக தொழில் வாய்ப்பினை உருவாக்கி  பல இளைஞர் யுவதிகளுக்கு எதிர்காலத்தில் தொழில்வாய்ப்பினை வழங்கக்கூடிய விதத்தில் திட்டமிடப்பட்டு வருகின்றமை குறிப்பாக சுற்றுலாத்துறை வழிகாட்டிகள்  பலருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் திட்டமிடப்படுகின்றது .எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையில் இலங்கை மிகவும் ஒரு அழகான இடத்தினை பிடிக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை எனவும் கௌரவ ஆளுநர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இந்த  நிகழ்வில்  வடமாகாண சிற்றுலா பணியகத்தின் தலைவர் க.தேவராஜா ,பணிப்பாளர்  ஜெயராஜா உள்ளிட்ட வடக்கின் சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் பலரும் கலந்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு