யாழ் மாவட்டத்தில் பயிர்ச்செய்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை நோக்கி………………………

யாழ் மாவட்டத்தில் மறுவயற் பயிர்கள் மற்றும் மரக்கறிப் பயிர்களிற்கென நிர்ணயிக்கப்பட்ட விஸ்தீரணத்தை அடைவதனைக் குறிக்கோளாகக் கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தமது பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கேதுவாக விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் நடமாடும் சேவைகள் மூலம் விவசாயிகளிற்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேற்படி நடமாடும் சேவைகள் மூலமான விற்பனை யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் மத்திய விவசாயத் திணைக்களத்தின் விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி மற்றும் விற்பனைப் பிரிவு,யாழ் மாவட்ட விதையுற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம்,காரைநகர் இளம் விவசாயிகள் கழகம், வெங்காய உண்மை விதையுற்பத்தியாளர் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றது. இந் நடமாடும் சேவையினுர்டாக பயற்றை,வெண்டி,பாகல்,தக்காளி,கத்தரி,கீரை,கெக்கரி ஆகிய மரக்கறி விதைகளும் மிளகாய்,வெங்காயஉண்மைவிதை, நிலக்கடலை, பயறு, குரக்கன், உழுந்து, கௌபி, சோளம், மரவள்ளிதுண்டங்கள், காளான் வித்திகள், பொதி செய்யப்பட்ட மரக்கறிக் கன்றுகள்,பழமரக்கன்றுகள் என்பனவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இஞ்சி,மஞ்சள் போன்றவற்றின் பயிர்ச்செய்கைக்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைவதுடன், சிறுபோகம் 2020 இல் விவசாயப் போதனாசிரியர் பிரிவு ரீதியாக இஞ்சி நடுகைப் பொருட்கள் குருநாகல் மாவட்டத்திலிருந்து ஒழுங்கு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு நடுகை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இஞ்சி,மஞ்சள் போன்றவற்றிற்கு தற்காலத்தில் நிலவும் அதீத கேள்வியைக் கருத்தில் கொண்டு 2020/21 பெரும் போகத்தில் அப் பயிர்ச்செய்கைகளை விஸ்தரிக்கும் நோக்கில் யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இஞ்சி,மஞ்சள் நாற்றுக்கள் வேறு அளவுள்ள பொதிகளில் விவசாயிகளிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ரூ.150.00ற்கு விற்கப்படும் பெரிய பொதிகளில் நடுகை செய்யப்பட்ட நாற்றுப்பொதிகளை அறுவடைகாலம் வரை அப் பொதிகளிலேயே பராமரித்து அறுவடையைப் பெறமுடியும். ரூ.50.00ற்கு சிறிய பொதிகளில் விற்பனை செய்யப்படும் நாற்றுக்களை நிலத்திலோ அல்லது மண் நிரப்பப்பட்ட பெரிய உரப்பைகளிலோ மீள் நடுகை செய்து பராமரிப்பதன் மூலம் அறுவடையைப் பெற்றுக்கொள்ளலாம்.