யாழ் நகர வடிகால் அமைப்பு திட்ட கலந்துரையாடல்

உலக வங்கியின் நிதியிடலில் முன்னெடுக்கப்படவுள்ள நகர வடிகால் அமைப்பு திட்ட கலந்துரையாடல், வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று 07.01.2021 காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச்செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட பொறியியலாளர், மாநகரசபை ஆணையாளர், உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், ஏற்கனவே ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு, பல்வேறு தடங்கல்களுக்கு மத்தியில் தடைப்பட்டிருந்தது. எனினும் இத்திட்ட முன்னெடுப்பின் அவசியத்தன்மையின் பொருட்டு நான் கௌரவ பிரதம அமைச்சருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் மீண்டும் இத்திட்ட முன்னெடுப்பு உலகவங்கியின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்த அனுமதி கிடைத்துள்ளது. எனவே யாழ் மக்களுக்கு மிகத்தேவையான இந் நகர வடிகால் அமைப்பு திட்டத்தை ஒரு வருட காலத்தினுள் முழுமையாக செய்து முடிப்பதற்கு, நகர அபிவிருத்தி அதிகாரசபையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பினை செவ்வனே நிறைவேற்ற வேண்டுமென கௌரவ ஆளுநர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் கௌரவ ஆளுனரால் வழங்கப்பட்டது. சாத்தியமான திட்ட முன்னெடுப்புக்களை ஒருவருட காலத்தினுள் தெரிவுசெய்து பொருத்தமான ஒப்பந்தகாரர்களை சட்டரீதியில் அமர்த்தி, திட்ட முன்னெடுப்பு பிரதேசங்களில் காணப்படும் சட்டரீதியற்ற செயற்பாடுகளை காவற்துறையின் உதவியுடன் அகற்றி, திட்டத்தை முன்னெடுக்க பணிக்கப்பட்டது. இந்நிலையில் ஏதாவது தடங்கல் ஏற்படின் அதனை உடனடியாக உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், கிராம மக்கள் தமது நாளாந்த வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை செயற்படுத்தவும், குறிப்பாக சந்தை, பஸ் தரிப்பிடம் மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கான ஓய்வு அறை, மற்றும் மலசலகூட வசதி என்பவற்றை கட்டாயமாக ஒதுக்கப்பட வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. இதனை பெண்கள் விவகார அமைச்சு அதிகாரிகளும் மற்றும் உரிய தரப்பினர் கொள்கை திட்டங்களை உள்ளடக்கி அதன் நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி பெண்கள் போன்றவர்களுக்கான பாதுகாப்பான வீதியோர நடைபாதைகளை  அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மன்னார் வவுனியா பஸ்தரிப்பிட திட்ட செயற்பாடுகள் தொடர்பில் தனது திருப்தியை தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பஸ் நிலைய செயற்பாடுகள் தொடர்பில் உரிய அதிகாரியிடம் ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.