மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் – மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட அரச அதிபர் தலைமையில் 17 டிசெம்பர் 2020 அன்று காலை 9.3௦ மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ், மன்னார் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், திலீபன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடமாகாணத்திற்கு உட்பட்ட திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள், பொலீஸ் மற்றும் கடற்படை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இவ் ஆரம்ப நிகழ்வில் கருத்து தெரிவித்த கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களே கடந்தகால யுத்த அனர்த்தங்களால் பெருமளவில் பாதிப்படைந்தன. மன்னார் மாவட்டம் அந்தளவிற்கு பாதிப்பை எதிர்கொள்ளவில்லை எனினும் ஒப்பீட்டளவில் உட்கட்டமைப்பு வசதிகள் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. இதற்கான முக்கிய காரணம், பொறுப்பு  கூற வேண்டியவர்களின் சிறந்த திட்டமிடலின்மையே என சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள், இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் திட்டங்கள் உரிய முறையில் அமைய வேண்டுமென உரிய அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

மேலும், நெல் மற்றும் மீன்பிடித்துறை முக்கிய உற்பத்தி பொருட்களாக காணப்படுகின்றது. எனினும் அவற்றை பதனிடும் தொழிற்சாலைகளின்  உட்கட்டமைப்பு வசதிகள் இம்மாவட்டத்தில் காணப்படாமையால், இவ்உற்பத்தி பொருட்களின் பெறுமதி சேர்க்கப்படாது வெளி இடங்களுக்கு அனுப்பப்படுகின்ற காரணத்தால் இம்மாவட்ட மக்கள் பாதிப்படைகின்றார்கள். எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பில் சிறந்த திட்டமிடலை மேற்கொண்டு மாவட்ட அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறு  தெரிவித்தார்.

மேலும் கல்வி, சுகாதாரத்துறை தொடர்பில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், இவைகள் தொடர்பாக காணப்படும் ஆளணி மற்றும் கட்டட வசதி தேவைகள் விரைவில் தீர்க்கப்படுமென உறுதியளித்தார். வைத்தியர், தாதியர் ஆளணி பற்றாக்குறைக்கு சுகாதார அமைச்சினரால் ஆளணிகள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இரு வைத்தியசாலைக் கட்டடங்கள் அமைப்பதற்கு இந்திய உயர்ஸ்தானிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று திட்டம் சமர்ப்பிக்கபட்டுள்ளது. இது தொடர்பில் மிக சாதகமான பதில் கிடைக்குமென உறுதியளித்தார்.

தொடர்ந்து, மன்னார் மாவட்டத்தின் தற்போதைய கொவிட் -19 நிலைமை, அண்மையில் ஏற்பட்ட புரவி புயலினால் ஏற்பட்ட சேதவிபரங்கள், அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயாப்பட்டது. மேலும், இம்மாவட்டத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்ட விடயங்கள், அவைதொடர்பில் திணைக்களங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக விவசாயம், கல்வி, சுகாதாரம், கடற்தொழில், வீதி அபிவிருத்தி, சட்டரீதியற்ற மண்ணகழ்வு, இந்திய மீனவர்களின் அத்துமீறல் பிரச்சனைகளை , திணைக்களங்களின் ஆளணி பற்றாக்குறை, கட்டடவசதி பற்றாக்குறை, குளங்கள் மற்றும் கிராமங்களின் மறுமலர்ச்சி திட்டங்கள் , கூட்டுறவு அபிவிருத்தி நடவடிக்கைகள், சட்டரீதியற்ற நில அபகரிப்பு போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இப்பிரச்சனைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள் வடக்கு மாகாணத்தில் இவ்வருடம் நெல் தவிர்ந்த ஏனைய பயிர்ச் செய்கை உற்பத்தி 10% அதிகரிப்பதாகவும், மேடைநாற்று பதியம்  மற்றும் விதைகள் பதியம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார். மேலும், அனர்த்தங்கள், ஆபத்துக்களை தவிர்க்கவே சட்ட ஏற்பாடுகள் ஒதுக்கீடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  எனவே இச்சட்ட ஏற்பாடுகளை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் இயற்கையை பாதுகாப்பதற்கு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  வலியுறுத்தப்பட்டதோடு இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு விரைவில் உரிய தீர்வு கிடைக்குமென  உறுதியளித்த கௌரவ ஆளுநர் அவர்கள் வடமாகாணத்தில் மேச்சல் தரைகள் ஒதுக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும்  தெரிவித்தார், மேலும், சட்டவிரோத பனைமரம் வெட்டல் தொடர்பில் உரிய அனுமதியின்றி வெட்டப்படும் மரங்களை சோதனை சாவடிகளில் பரிசோதித்து பாரபட்சமற்ற முறையில் சட்ட நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்பிக்குமாறும்  போலீஸ் தரப்பினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.