2021ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண மாவட்ட முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது 02 பெப்பிரவரி 2021 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில், வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கயன் இராமநாதன் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஆகியோரின் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்றது.
கொவிட்-19 சுகாதார நடைமுறை விதிகளுக்கமைய இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழு கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள், யாழ் மாவட்டம் யுத்தத்தின் பின் அபிவிருத்தி விடயத்தில் பல்வேறு மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் கண்டு வருகின்றது. எனினும் மக்களின் பல தேவைகள் இன்னமும் உடனடியாக நிறைவேற்றவேண்டிய நிலையில் உள்ளது. அந்த வகையில் மேன்மை தங்கிய ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்திற்கு அமைய மக்களின் கல்வி, சுகாதாரம் போன்ற தேவைகள் மிக விரைவில் பூர்த்தி செய்யப்படும். முக்கியமாக தீவகத்திற்கான போக்குவரத்து குறைபாடு பற்றி தனக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்ததாக கூறியதோடு, அதனை தான் உயர் மட்டத்தினரிடம் எடுத்துரைத்ததாகவும், அதற்கான தீர்வினை நடைமுறை படுத்துவத்தற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் கல்வி சம்பந்தமான விடயத்தில், தற்போது கிராமப்புற பாடசாலைகளுக்கான வளப்பகிர்வு விடயத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கி அதனை சீரமைத்து வருவதாகவும், அந்தவகையில் சரியான இடமாற்ற கொள்கைகள் உருவாக்கப்பட்டு தற்போது அதனை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், மாகாண ஆளுநர்களுக்கு அதிமேதகு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள, ஆளணியை நிரப்புவதற்கான அதிகாரங்களை உபயோகித்து தற்போது புதிய ஆட்சேர்ப்பு மூலமாக ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை தொடர்பில், மருத்துவர்கள், தாதியர்கள் பற்றாக்குறை, அவர்களுக்கான வதிவிட வசதியின்மை பிரச்சனைகளுக்கு தேசிய கொள்கை அடிப்படையில் இருமாத காலத்தினுள் தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.
விவசாயம்,காணி மற்றும் இதர மக்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு வழங்கல் செயற்பாட்டில் உறுதி வழங்கிய கௌரவ ஆளுநர் அவர்கள், மத்திய அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களோ அல்லது மாகாண அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களோ எவையாயினும் கட்டடங்கள் கட்டுவதை மட்டும் நோக்காக கொண்டு செயற்படாது, அக்கட்டடங்களுக்கான தேவை, அவற்றிற்கான ஆளணி என்பவற்றை முதலில் கண்காணிக்கவேண்டுமென தெரிவித்தார்.
மேலும் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட வீட்டுத்திட்ட வீடுகளில் வவுனியாவில் 7௦௦ பேரும், முல்லைத்தீவில் 9௦௦ பேரும் வீடுகளில் குடியிருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டியதோடு பிரதேச செயலாளர்கள் பயனாளிகளை தெரிவுசெய்யும் போது சரியான தேவைகள் உள்ள பயனாளிகளை தெரிவு செய்வதை உரிய தரப்பினர் உறுதி செய்யவேண்டுமென வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கயன் இராமநாதன், எம்.எ. சுமந்திரன், சி.சிறிதரன், க.பொன்னம்பலம், சி.வி.கே. சிவஞானம் ஆகியோருடன் பிரதேசசபை தவிசாளர்கள், வடமாகாண ஆளுநரின் செயலாளர், இணைப்பு செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரும் சுகாதார விதிமுறைகளுக்கமைய கலந்துகொண்டனர்.