மாமரம் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறி

விவசாய ஊக்குவிப்பு வாரத்தை முன்னிட்டு பாவற்குளம் பகுதியில் கடந்த 09.10.2019 ஆம் திகதியன்று மாமரத்தில் கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் தொடர்பான பயிற்சிநெறியொன்று நடாத்தப்பட்டது. பொதுவாக கத்தரித்தல் மற்றும் பயிற்றுவித்தல் செயன்முறையானது மாமரத்தின் இரண்டாவது வளர்ச்சிப் பருவத்திலிருந்தே மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் தாவரத்தில் சூரியஒளி படும் அளவு அதிகரிக்கப்படுவதுடன், நோய் பீடைத் தாக்கங்களும் குறைக்கப்படுகிறது. மேலும் நோய்த் தாக்கமுற்ற தாவரப் பாகங்கள் அகற்றப்படுவதுடன் தாவரமானது பராமரிக்கக் கூடிய உயரத்தில் பேணப்படுகிறது. இதன் விளைவாக மாமரத்தில் காய் கொள்ளும் தன்மை அதிகரிக்கப்படுவதுடன், அதன் தரமும் பேணப்படுகிறது. கத்தரித்தல் பயிற்றுவித்தலானது பொதுவாக சித்திரை– ஆடி காலப்பகுதிகளிலேயே மேற்கொள்ளப்படுகிறது. இப் பயிற்சிநெறியில் அப்பகுதியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 45 விவசாயிகள் பங்குபற்றி பயன்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.