27 ஜனவரி 2020 அன்று காலை மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைமைக் காரியாலய கட்டடத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராக வடக்குமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் கலந்துகொண்டார்.
வடக்கு மாகாண சபையின் பிரதம செயலர் திரு அ பத்திநாதன், வன்னிமாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க தலைவர், பிரதேச செயலாளர், திணைக்கள உயரதிகாரிகள், நிறுவனத்தலைவர்கள், கூட்டுறவு சங்க அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முழுமையாக தரைமட்டமாக்கப்பட்டிருந்த இந்த கட்டடம் மிகுந்த சிரமத்தின் மத்தியிலே மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து இக்கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டதாக இங்கு பேசிய நிர்வாக உயரதிகாரிகள் தெரிவித்தார்கள்.
கூட்டுறவு என்பது காசாலோ கட்டடங்களாலோ கட்டியெழுப்புவது அல்ல இகூட்டுறவு என்பது ஒரு பண்பான வாழ்க்கைத்துறை என்று குறிப்பிட்ட பிரதம செயலாளர் பயனற்று கிடக்கும் இயந்திரங்களையும் கட்டடங்களையும் மீள விரைவாக மக்களுக்கு பயனுள்ளதாக்கும் படி ஆளுநர் தனக்கு பணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஆளுநர் கூட்டுறவே நாட்டுயர்வு என்பதை நினைவுபடுத்தியதோடு இனம் மதம் கட்சி என்பவற்றிற்கு அப்பால் மக்களுக்கு சேவையற்றவேண்டும். மக்களுக்கான சேவைகளை யாரும் எதன்பொருட்டும் முடக்க இடமளிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அண்மையில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களை சந்தித்த போது விவசாயிகளின் விலை நிர்ணய பிரச்சனை தொடர்பில் குறிப்பிட்டபோது அனைத்து விவசாயிகளிடமிருந்தும் நெல்லை உரிய நேரத்தில் உரிய நிர்ணய விலையில் கொள்வனவு செய்யும்படி தனக்கு முன்னிலையிலே ஜனாதிபதியின் செயலாளரிடம் உத்தரவிட்டதாகவும் இதற்கிணங்க விரைவாக வடக்கு மாகாண விவசாயிகளுக்கும் இவற்றை நடைமுறைப்படுத்த அதிகாரிகளை தான் பணித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து நானாட்டான் பிரதேச சபையின் கட்டட திறப்புவிழாவிலும் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.