வரலாற்றுப் புகழ்மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கும் விஜயம்
ஆளுநராக பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை 15 பெப்பிரவரி 2019 அன்று முற்பகல் சந்தித்தார்.
அஸ்கிரிய விஹாரைக்கு விஜயம் செய்த ஆளுநர் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரர் அவர்களை சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.
அத்துடன் மல்வத்து விஹாரைக்கு விஜயம் செய்த ஆளுநர் அவர்கள் மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரர் அதிசங்கைக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தலைமைத்தேரரை சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.
வட மாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் தான் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் மஹாநாயக்கர்களுக்கு இதன்போது விளக்கமளித்த ஆளுநர் அவர்கள், போருக்கு முகம்கொடுத்த மக்கள் வாழும் மாகாணமாக வடமாகாணம் காணப்படுவதால் அம்மக்கள் அபிவிருத்தியிலும் பொருளாதார ரீதியிலும் உளவியல் ரீதியிலும் நலிவடைந்திருப்பதை சுட்டிக்காட்டியதுடன், அவர்களை இந்தப் பிரச்சனையிலிருந்து மீட்பதற்கான அடித்தளத்தினை சரியான முறையில் நிறுவதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஒத்துழைப்பும் அரசாங்கத்தின் ஒத்துழைப்பும் தாராளமாக கிடைப்பதாகவும் குறிப்பிட்டதோடு பௌத்த மத மஹாநாயக்கர்கள் என்ற ரீதியில் தான் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி வவுனியாவில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பௌத்த மாநாடு தொடர்பிலும் மஹாநாயக்கர்களுக்கும் இதன்போது விளக்கமளித்தார்.
சிறந்த கல்விமான் ஒருவரையே வட மாகாணத்தின் ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியமித்துள்ளதாக குறிப்பிட்ட மஹாநாயக்கர்கள் , அரசியல்வாதிகளிடமிருந்து வேறுபட்டு மக்களுடைய அடிப்படைப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமையளித்து ஆளுநர் செயற்பட்டுவருவதை தாம் அறிந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில் வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஆளுநர் அவர்கள் புனித தந்ததாதுவினை தரிசித்து வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆசீர்வாதமும் பெற்றுக்கொண்டார்.
கண்டி தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் அவர்களை கண்டி தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல பண்டார அவர்கள் வரவேற்றார்.
இந்த சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.