போர்க்காலத்தில் மட்டுமல்ல போரில்லா காலத்திலும் கூட பெண்களின் பங்களிப்பு சமமாக இருக்க வேண்டும் – கௌரவ ஆளுநர்

”சகல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அளப்பரியது. போர்க்காலத்தில் மட்டுமல்ல போரில்லாக் காலத்திலும் கூட பெண்களின் பங்களிப்புச் சமனாக இருத்தல் வேண்டும்.”

வட மாகாண பெண்கள் சாரணியத்தை மீள ஆரம்பித்து வைக்கும் நிகழ்வானது இலங்கை பெண்கள் சாரணியர் சங்கத்தினால் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் 12 அக்டோபர் 2019 அன்று யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பிரதம விருந்தினாராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தெற்கு ஆசியாவில் குறிப்பாக இந்து சமயத்தில் பெண் கடவுள்கள் அதிகமாக வணங்கப்படுகின்றார்கள். குறிப்பாக அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தில் பெண் தெய்வத்திற்கு சரிசமம் வழங்கப்பட்டுள்ளது.

சாரணியத்திலுள்ள பெண்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வதென்னவென்றால் நீங்கள் சகல துறைகளிலும் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். குறிப்பாக எந்த துறையில் சமத்துவம் தர மறுக்கப்பட்டுள்ளதோ அவற்றில் கூடிய கவனத்தைச் செலுத்துங்கள். இலங்கையில் பெண்களுக்கான விகிதம் சமத்துவத்தை விட சற்று அதிகமாகவே அதாவது 52 சதவீதம் வழங்கப்பட வேண்டும்.

உலகுக்கு முதலாவது பெண் பிரதமரைத் தந்த நாடு இலங்கையாகும். முதலாவது எதிர்க் கட்சித் தலைவரும் இலங்கையர் தான். இந் நாட்டில் ஜனாதிபதியாகவும், பிரதம நீதியரசராகவும் பெண்கள் இருந்துள்ளார்கள். முதல் நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்பட்டவரும் பெண் தான். இலங்கையிலிருந்து முதலாவதாக பிரித்தானியப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றவரும் ஒரு பெண்தான். நாம் ஏனைய நாடுகளை விட அதிகளவான பெண்சமத்துவத்தை வழங்கியதில் நாம் பெருமை கொள்கின்றோம்.

உங்களுடைய வாழ்க்கையை மிகவும் பயனுள்ளதாக்கிக் கொள்ளுங்கள். பேஸ்புக்கில் உங்களுடைய நேரங்களை விரயம் செய்ய வேண்டாம். நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களைப் படியுங்கள். இதற்காக குறைந்தது 20 நிமிடங்களையாவுது செலவழியுங்கள். புத்தகங்களே உலகின் மிகச் சிறந்த வழிகாட்டி.

இந்த சமூகத்தில் உதவியை நாடி பலர் உள்ளார்கள். அவர்களைத் தேடிச் சென்று உதவுங்கள். நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் நீதியை நாடாத எந்த ஒரு சமூகமும் நிலைபேறடைந்ததில்லை.

Best Last Minute Staycation Ideas (2023 Staying Local)

–  ஆளுநரின் ஊடகப் பிரிவு