புரவி புயலின் தாக்கம் தொடர்பான களஆய்வு

கடந்த 02.12.2020 மற்றும் 03.12.2020 ஆம் திகதிகளில் வடமாகாணத்தின் ஊடாக கடந்த புரவிப் புயலின் தாக்கம் காரமணாக கிடைத்த கனமழை, விவசாய மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புக்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் தொடர்பாக பார்வையிடுவதற்கான கள விஜயத்தினை வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு.அ.சிவபாலசுந்தரன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

மேற்படி களவிஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுக்குளம், கிளிநொச்சிக்குளம், கனகாம்பிகைக்குளம் மற்றும் அக்கராயன் குளம் ஆகியவற்றை பார்வையிட்டு குறித்த குளங்களுக்குரிய பொறியியலாளர்களான எந்திரி.எஸ்.பரணீதரன், எந்திரி.எஸ்.செந்தில்குமரன், எந்திரி.ரிசியந்தன் ஆகியோருடன் கள நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியதுடன் தேவையான கண்காணிப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம், கோட்டைகட்டிய பெருமாள் குளம், அனிச்சயன் குளம் ஆகியவற்றினை பார்வையிட்டதுடன் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.என்.சுதாகரன் பிரிவுப் பொறியியலாளர் எந்திரி பிரகாஸ் ஆகியோருடன் முல்லைத்தீவு மாவட்ட குளங்களது நிலைமை தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.

வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக்குரிய மழை வீழ்ச்சி ஆரம்பிக்காத நிலையில் தாழமுக்கம் காரணமாக கிடைத்த மழை வீழ்ச்சியானது குளங்களுக்குரிய நீர் வரத்தினை அதிகரித்துள்ளமையை நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் சுட்டிக்காட்டியிருந்தனர். நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அலுவலர்கள் முழுமையான தயார் நிலையில் களக் கடமையில் இருப்பதனை உறுதி செய்யக்கூடியதாக இருந்துள்ளது.