பாலியாறு நீர்த்திட்டம் இன்று அங்குரார்ப்பணம்

வடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் இன்று (15/05/2024) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாலியாறு நீர்த்திட்ட அங்குரார்ப்பண நிகழ்விற்கான நினைவுப் பாதாதை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் திரைநீக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாலியாறு நீர்த்திட்ட அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது.

பாலியாறு நீர்த்திட்டத்திற்காக 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களையும், பூநகரி பிரதேசத்தின் ஒரு பகுதியும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் 127,746 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.