பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – வட மாகாண ஆளுநர், ஐ.நா சிறுவர் நிதியத்திடம் கோரிக்கை

Real Money Poker Sites That Accept US Players in 2023
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கும், வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது. யாழ்பாணத்திலுள்ள ஆளுநர் மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் சிறுவர் மேம்பாட்டு நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த விசேட சந்திப்பு நடைபெற்றது.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Christian Skoog, உதவி பிரதிநிதி Begona Arellano, கல்வி உத்தியோகத்தர் உள்ளிட்ட குழாத்தினர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
மாணவர்களின் கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் விதம், சிறுவர்களுக்கான திறன் மேம்பாட்டு செயற்பாடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், சட்டவிரோத செயற்பாடுகள், பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விழிப்புணர்வு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கௌரவ ஆளுநரால், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இதன்போது ஆளுநர் வலியுறுத்தினார். அதிகாலை தொடக்கம், இரவு வரை மாணவர்கள் பிரத்தியேக வகுப்புகளில் தங்கவைக்கபடுவதால் , மாணவர்களின் திறன் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நேரம் ஒதுக்கப்படுவதில்லை என இதன்போது கௌரவ ஆளுநர் கூறினார். சாதாரண மற்றும் உயர்தர பரீட்சையின் பின்னர் மாணவர்களின் நிலைப்பாடு கவலைக்கிடமாக காணப்படுவதாகவும், இந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகள் , வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் கௌரவ ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் அதிகரித்துள்ள நிலையில் அதனை தடுப்பதற்கான செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு தேவையான விழிப்புணர்வு  செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளிடம், வட மாகாண கௌரவ ஆளுநர் கோரிக்கை விடுத்தார்.
சிறுவர்களின் எதிர்காலம் தொடர்பில் பெற்றோர்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும், விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும் என ஆளுநர் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தினார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஐ.நா சிறுவர் நிதியம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், வட மாகாண ஆளுனரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Christian Skoog  இதன்போது கூறினார்.