நெல்லியடி பொதுச்சந்தையில் நடமாடும் சேவை

யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தினரின் ஏற்பாட்டில் நெல்லியடி பொதுச்சந்தையில் விவசாயிகள், அலுவலக, பாடசாலை மற்றும் வீட்டுத்தோட்டச் செய்கையாளர்கள் பயன்பெறும் வகையில் நடமாடும் சேவையானது 10.04.2019 (புதன்கிழமை) அன்று காலை 7.30 மணி முதல் 11.30 மணிவரை யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நடமாடும் சேவையில் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அவர்களின் ஆதரவுடன் பயிர்ச் சிகிச்சை முகாம் நடாத்தப்பட்டது. இப் பயிர்ச் சிகிச்சை முகாமில் நோய் மற்றும் பீடைத் தாக்கங்களினால் பாதிக்கப்பட்ட பயிர்கள் / தாவரங்கள் அல்லது பயிர்களின் / தாவரத்தின் பகுதிகள் விவசாயிகளினால் கொண்டுவந்து தாவர வைத்தியர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டன. தாவர வைத்தியர்களினால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டு அதற்குரிய பரிந்துரைகளும் / சிபாரிசுகளும் உரிய விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. 23 விவசாயிகள் இச் செயற்பாட்டின் மூலம் பயனடைந்துள்ளார்கள். இவர்களில் 15 விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யும் படிவத்தின் மூலம் பரிந்துரை / சிபாரிசு வழங்கப்பட்டது. இவ் விவசாயிகளின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு உடனுக்குடன் குறுஞ்செய்தியும் அனுப்பி வைக்கப்பட்டது.

இப்பயிர்ச்சிகிச்சை முகாமிற்கு மேலதிகமாக சேதன விவசாயச் செய்கை தொடர்பாக விவசாயிகளுக்கும் மற்றும் வீட்டுத் தோட்டச் செய்கையாளர்களிற்கும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. சேதன திரவப் பசளைகளான பஞ்சகௌவியா, அமிர்தக் கரைசல், தாவரப் பீடைநாசினிகள், ஐந்திலைக்கரைசல், இஞ்சி, உள்ளி மற்றும் பச்சை மிளகாய் ஆகிய மூன்றும் சேர்ந்த மூவிலைக் கரைசல் முதலானவற்றின் தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறை என்பன தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டன.

இனக் கவர்ச்சிப் பொறி (Pheromone trap) மற்றும் பழங்களிற்கு உறையிடுவதன் மூலம் பழங்களில் ஏற்படும் பழஈ இன் தாக்கத்தினை எவ்வாறு கட்டுப்படுத்தி / முகாமைத்துவம் செய்வது தரமான நஞ்சற்ற பழத்தினைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் பங்குபற்றுநர்களிற்கு விளக்கமளிக்கப்பட்டது.

சிறந்த விவசாயச் செயன்முறைகளை ஊக்குவிக்கும் முகமாக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர் இச் செயன் முறை மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பாகவும் மற்றும் இதன் கீழ் பதிவு செய்து சான்றிதழைப் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் பங்குபற்றுநர்களிற்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் விளக்கமளித்தார்.

வீட்டுத்தோட்டங்கள், பாடசாலைத் தோட்டங்கள் மற்றும் அலுவலகத்தோட்டங்கள் என்பவற்றை அமைப்பதற்கும் அவற்றினை மேம்படுத்துவதற்கும் தேவையான உயிர் உள்ளீடுகளை வழங்கும் நோக்குடன் திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் அச்சுவேலியில் அமைந்துள்ள பூங்கனியியல் கரு மூலவள நிலையம் என்பன தமது உற்பத்திகளான பொதிகளில் வளர்க்கப்பட்ட மரக்கறி நாற்றுக்கள், கமுகு, சண்டி, குரோட்டன், புதினா, முசுட்டை, முடக்கொத்தான், கற்றாளை பழ மரகன்றுகள் மற்றும் ஏனைய மரக்கன்றுகள் என்பனவும் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பசுமையான நாட்டினைக் கட்டியெழுப்புவதற்குத் தேவைப்படும் மரக்கன்றுகளை வழங்கும் நோக்கமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பயிர்களின் உற்பத்திதிறன் மற்றும் தரத்தினை அதிகரிக்கும் நோக்குடன் இந்நடமாடும் சேவையில் பயறு, உழுந்து, கௌபி, நிலக்கடலை மற்றும் மரக்கறி பயிர்களின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதைகள் என்பனவும் விற்பனை செய்யப்பட்டன.

விவசாயிகளிற்கு விவசாயம் தொடர்பான மேலதிக தொழில் நுட்ப தகவல்களை வழங்கக் கூடிய விவசாயத்திணைக்களத்தின் வெளியீடுகள் மற்றும் கையேடுகள் (திராட்சை,மா, பலாச் செய்கை, தோடைச் செய்கை, கொய்யாச் செய்கை காளான் வளர்ப்பு, அறுவடைக்குப் பின்னரான தொழில் நுட்பம், பீடை நாசினியாக வேம்பு, நெல் உற்பத்தி, மண்ணின்றிய பயிர்ச்செய்கை (Hydroponics), பீடைநாசினி சிபாரிசு, இலைமரக்கறி மற்றும் சேதனவிவசாயம்) என்பனவும் விற்பனை செய்யப்பட்டன.

இதனுடன் விவசாயிகளிற்கு சந்தைப்படுத்தலினை இலகுவாக மேற்கொள்ளும் முகமாக கைத்தொலைபேசிகளில் “கொவிபொல” எனும் செயலியினை(App) தரவிறக்கம் செய்து கொடுத்து அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பது தொடர்பான பூரண விளக்கம் வழங்கப்பட்டது. இச் செயலியானது 5 விவசாயிகளிற்கு தரவிறக்கி கொடுக்கப்பட்டு அவர்களது உற்பத்தி விபரங்கள் உள்ளீடு செய்து கொடுக்கப்பட்டன.