சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு வடமாகாண பிரதம செயலாளரின் தலைமையில் சிறுவர் தினக் கொண்டாட்டமானது 08.10.2023 அன்று காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு பிரதேச சபையின் தேவா கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
நெடுந்தீவின் ஏழு முன்பள்ளிகளைக் கொண்ட 137 சிறுவர் சிறுமியர்கள் கலந்து சிறப்பித்திருந்த இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் மற்றும் அவரது பாரியார், தீவக வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி நிர்வாகம்), தீவக வலய முன்பள்ளி உதவிக் கல்வி பணிப்பாளர், நெடுந்தீவு பிரதேச சபை செயலாளர், கியூமெடிக்கா நிறுவனத்தின் பணிப்பாளர், பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்கள், வேலனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர்கள், முன்பள்ளி ஆசியர்கள், முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து பிரதம செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் அதிதிகள் மேடைக்கு அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் மற்றும் முன்பள்ளி மாணவர்களினால் இறைவணக்கம் செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து வடமாகாணத்தின் உதவிப் பிரதம செயலாளர் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன் முன்பள்ளி மாணவர்களினால் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. அடுத்து நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபையின் வணக்கத்துக்குரிய போதகரினால் ஆசியுரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தீவக வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ‘இன்று நெடுந்தீவு முன்பள்ளி சிறுவர்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகும் எனக் கூறியதுடன் சத்துமா செயற்றிட்டத்தையும் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஆரம்ப கட்டமாக பிரதம செயலாளர் செயலகம் மற்றும் பிரதிப்பிரதம செயலாளர் செயலகத்தினால் இரு வாரங்களிற்கு தேவையான சத்துமா பொதிகள் சிறுவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் இத்திட்டத்தினை கியூமெடிக்கா நிறுவனமானது நான்கு மாதங்களுக்கு தேவையான சத்துமா உணவுப் பொதிகளை வழங்கும் நோக்குடன் இந்நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் பங்குபற்றிய 07 முன்பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் உடற்திணிவு சுட்டி (BMI) பொதுசுகாதார பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்களின் உதவியுடன் கணிப்பிடப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ‘பிள்ளைகளது கல்வி, சுகாதாரம் என்பவற்றில் பெற்றோர்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் எனவும் என்னால் முடியாது என்பதனை விலக்கி பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்படும் போது சிறந்த எதிர்காலத்தை உருவாக்கலாம் எனவும் கூறினார். தொடர்ந்து சிறுவர் தினத்தை கொண்டாட பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு பிரதம செயலாளர் செயலக நலன்புரிச்சங்கத்தின் உதவியுடன் கொடுக்கப்பட்ட பிள்ளைகளுக்குரிய பரிசுப்பொருட்கள் மற்றும் சத்துணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கியூமெடிக்கா நிறுவன பணிப்பாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ‘ஆரம்ப பள்ளி என்பது பிள்ளைகளின் முதல் அடி எனவும் பிள்ளைகளது வளர்ச்சியானது ஆசிரியர், பெற்றோர், பிள்ளை எனும் முக்கோண வடிவில் இணைந்து செயற்பட வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார். இவ்வாறாக பிரதம செயலாளர் செயலக நிர்வாக உத்தியோகத்தரின் நன்றியுரையுடன் பிற்பகல் 1.00 மணிக்கு இந் நிகழ்வு நிறைவு பெற்றது.