தேசிய மீலாதுன் நபி விழா மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்பட்டது

அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சம உரிமை வழங்குவதும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் பலஸ்தீன மக்களை பலிகடா ஆக்குவதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அந்த பிரதேசங்களில் மோதல்களை தடுத்து அமைதியை நிலைநாட்ட ஐ.நா செயலாளர் நாயகத்தின் திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மன்னார் முசலி தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமய கலாசார அலுவல்கள் அமைச்சும் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை முஸ்லிம் மத மற்றும் கலாசார பிரமுகர்கள் அன்புடன் வரவேற்றனர்.
அஷேக் பி. நிஹாமத்துல்லாஹ் மௌலவி அவர்களால் நிகழ்வு ஏற்பாடுகளை ஒருங்கமைத்திருந்தார்.
தேசிய மீலாதுன் நபி விழா 2023 க்கான நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் அட்டையும் வெளியிடப்பட்டதுடன், தபால் மா அதிபர் ருவன் சத்குமாரவினால் ஜனாதிபதிக்கு முதல் முத்திரை மற்றும் முதல் நாள் அட்டை வழங்கப்பட்டது.

தேசிய நபி விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட நினைவுச் சின்னம் மற்றும் ‘மன்னார் மாவட்ட வரலாறு’ நூல் என்பன ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
நபிநாயகத்தின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட வடிவமைப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைத்தார்.

பள்ளிவாசல்களில் நீண்டகாலம் பணியாற்றிய மௌலவிகளுக்கு கௌரவ விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், அப்பகுதிக்கு அளப்பரிய சேவையாற்றிய பேராசிரியர் மர்ஹூம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
புத்தளம் பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவருக்கும் புத்தளம் மாவட்ட ஜம்இதுல் உலமா அமைப்பின் தலைவருக்கும் நினைவு பரிசுகள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவு பரிசும் வழங்கி வைத்தார்.
கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கே. திலீபன், பௌத்த சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.எம். பைசல், மகாசங்கரத்னா தலைமையிலான சமயத் தலைவர்கள், தூதுவர்கள், பாதுகாப்புப் படைத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், பிரதேசவாசிகள் மற்றும் பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.