சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வு

மத்திய விவசாய அமைச்சு மற்றும் மத்திய விவசாயத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வட மாகாண விவசாயத் திணைக்களத்தினால் அமுல்ப்படுத்தப்படும் சௌபாக்கிய வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித் திட்டத்தில் விதைப்பொதிகள் வழங்கும் நிகழ்வானது நல்லூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயப் போதனாசிரியர் ம.கிரிதரன் அவர்களின் தலைமையில் கோண்டாவிலில் அமைந்துள்ள குமரக்கோட்டம் சனசமூக நிலையக் கட்டட வளாகத்தில் 06.05.2020 ஆம் திகதி அன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன், உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி. நடனமலர் விஜயன், பாட விதான உத்தியோகத்தர் (பயிர்ப் பாதுகாப்பு) எஸ்..பாலகிருஸ்ணன், மற்றும் அப் பிரதேச விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நல்லூர் விவசாயப் போதனாசிரியர் ம.கிரிதரன் அவர்கள் அப் பகுதி மக்களை ஆர்வமுடன் இவ் வீட்டுத் தோட்ட விதைப் பொதிகளினைப் பெற்று நடுகை செய்து விளைச்சலைப் பெற்றுக் கொள்வதன் மூலம் தமது குடும்பத்திற்கும் நாட்டிற்கும் உதவிகரமான பிரஜைகளாக விளங்குமாறு கேட்டுக் கொண்டார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் அவர்கள் தனது உரையில் இம் மாதங்களில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் அதிகரித்து வரும் விலைகளின் போக்கினைச் சுட்டிக்காட்டினார். எனவே மரக்கறி மற்றும் பழங்களிற்கான அதிகரித்து வரும் கேள்வியினைப் பூர்த்தி செய்வதற்கு நாம் அனைவரும் நமது நாளாந்த தேவைக்கான மரக்கறிப் பயிர்களினை நாமே பயிரிடுவதனால் சுயதேவையினைப் பூர்த்தி செய்வதுடன் இவ் விலை அதிகரிப்பினை ஓர் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம். அத்துடன் நஞ்சற்ற ஆரோக்கியமான போசணையான உணவு உற்பத்தி மற்றும் நுகர்விற்கும் வழிவகுக்க முடியும்.

ஒருவர் நாளொன்றிற்கு 200 கிராம் மரக்கறிகள் மற்றும் 200 கிராம் பழங்களை உண்ண வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆயினும் எமது உணவுப் பழக்கம் அதிகளவான சோறு அல்லது மாப்பொருள் மற்றும் குறைந்தளவான மரக்கறிகள் மற்றும் பழங்களினை உள்ளெடுப்பதாகவும் அமைந்துள்ளது. இதனை மாற்றி அதிகளவு மரக்கறிகள் மற்றும் பழங்களினை உள்ளெடுப்பதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் கொரோனா போன்ற தொற்றுநோய்களிற்கு இலக்காகும் ஆபத்திலிருந்து நாம் இலகுவாகத் தப்பித்துக் கொள்ளலாம். அத்துடன் மாப்பொருள் உணவுகளை அதிகம் உள்ளெடுப்பதைக் குறைத்து அதிகளவு மரக்கறிகள் மற்றும் பழங்களினை உள்ளெடுப்பதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் சௌபாக்கியா உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் சிறுபோகம் 2020 இல் உப உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சோளம், மிளகாய், பயறு, குரக்கன், நிலக்கடலை, கௌபி, சின்ன வெங்காயம், உழுந்து, சோயா அவரை, பெரிய வெங்காயம், எள்ளு ,கொள்ளு, உருளைக்கிழங்கு, இஞ்சி, மஞ்சள், உள்ளி (வெள்ளைப்பூடு) ஆகிய 16 பயிர்களுக்கு விதை மானியத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எனவே இதன் முக்கியத்துவத்தினை நன்கு விளங்கி நாமும் பயிரிட்டு பயன் பெறுவோம் எனக் கேட்டுக் கொண்டார்.

மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்கள் உரையாற்றுகையில் தற்போது உங்களுக்கு வழங்கப்படவுள்ள இவ் விதைப் பைக்கற்றுக்கள் வீட்டுத் தோட்டச் செய்கைக்கான நுழைவாயில் மட்டுமே. இதனை ஆரம்பமாகக் கொண்டு தொடர்ச்சியாக வீட்டுத் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வருடம் முழுவதும் உற்பத்தியைப் பெற்று பயனடைந்து நலம் பெற வேண்டுமென கூறினார். அதிகமான மரக்கறிகளினை உள்ளெடுப்பதனை உறுதி செய்வதற்காகக் குழைசாதம் போன்ற அதிகளவு மரக்கறிகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் போசணை மிக்க உணவுகளினை தயாரித்து உண்பதனால் நோயற்ற ஆரோக்கிய வாழ்விற்கு வழிவகுக்கும். இஞ்சி போன்ற பயிர்களைப் பொதிப் பயிராகவும் நிலத்தில் நேரடியாகவும் நடுகை செய்யலாம். எமது உள்ளுர் விதையினங்களில் சிறந்த விளைச்சலைப் பெற்றுக் கொள்ளக்கூடிய இனங்களைத் தெரிவு செய்து பயிரிடுவதனால் விளைச்சலை அதிகரிக்கலாம். அத்துடன் குறிப்பிட்ட சில வகையான உணவுகளையே தினந்தோறும் உண்பதனை விடுத்து உணவு உண்பதில் பல்வகைமையினைக் கடைப்பிடிப்பதால் உடலிற்குத் தேவையான சகல ஊட்டச்சத்துக்களும் கிடைக்கக் கூடியதாயிருக்கும். எனவே நாம் உணவுப் பாதுகாப்பு மற்றும் வருமானப் பாதுகாப்பினை எட்டப்பட வேண்டிய இலக்காகக் கொண்டு செயற்பட்டு வாழ்வில் உயர்வடைவோம் எனக் கூறினார்.

இறுதி நிகழ்வாக வீட்டுத் தோட்ட விதைப் பொதிகள் ஆர்வமுடைய விவசாயிகள் மற்றும் பொதுமக்களிற்கு வழங்கப்பட்டு நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.

 

விரைவான மத்திய கால உணவு உற்பத்தி தேசிய செயற்றிட்டத்தின் கீழ் மேலதிக உணவுப் பயிர்களை செய்கைபண்ணும் விவசாயிகளுக்கு விதைகளுக்கான சலுகைகளை அமுல் செய்வதற்கான ஆலோசனைகள்

சுற்றுநிருபம் – மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு