சோளப்பயிர்ச் செய்கையினை முன்னேற்றுதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சோளப்பயிர்ச் செய்கையினை முன்னேற்றுவதற்காக மத்திய அரசின் தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தின் கீழ் “மறுவயற் பயிர் சோளத்தின் உற்பத்தியினையும், உற்பத்தித்திறனையும் முன்னேற்றுதல்” நிகழ்ச்சித்திட்டத்தில் வடமாகாண விவசாயத்திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையினால் பத்து சோளப்பயிர்ச்செய்கை முன்மாதிரித் துண்டங்கள் உடையார்கட்டு, மாணிக்கபுரம், கோம்பாவில், மந்துவில், முத்தையன்கட்டுகுளம், கணேசபுரம், ஒட்டுசுட்டான் மற்றும் அளம்பில் ஆகிய விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஒரு முன்மாதிரித் துண்டத்தின் விஸ்தீரணம் 01 ஏக்கர் எனும் அடிப்படையில் 10 ஏக்கர் விஸ்தீரணத்தில் இம்முன்மாதிரித் துண்டங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

சூழலுக்கிசைவானதும் நிலைபேறானதுமான பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக இம்மாதிரித்துண்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ளுர் கலப்பின சோள வர்க்கமாகிய MI Maize Hybrid 1 செய்கை பண்ணப்பட்டுள்ளது. படைப்புழு முகாமைத்துவம் உள்ளிட்ட பயிராக்கவியல் செயற்பாடுகளை இலகுவாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு இம்முன்மாதிரித் துண்டங்களில் சோளமானது நிரைகளாக பயிரிடப்பட்டுள்ளது. வரிசைகளுக்கிடையில் 2அடி இடைவெளியும் வரிசையிலுள்ள பயிர்களுக்கிடையே 1அடி இடைவெளியும் இருக்கும் வகையில் 4 சோள வரிசைகளும் ஒவ்வொரு 4 வரிசை கொண்ட சோள நிரையினை அடுத்தும் 4 அடி இடைவெளி என்ற ஒழுங்கில் அமையுமாறு பயிர்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

மழைவீழ்ச்சி அதிகம் பெறப்படும் காலபோகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முன்மாதிரிசெய்கைத் துண்டங்கள் அனைத்திலும் மண் அரிப்பைத் தடுப்பதற்கான மண் பாதுகாப்பு அணைகள் இயற்கை மூலவள முகாமைத்துவ நிலையத்தினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இம்மட்காப்பு அணைகள் அடிப்புற அகலம் 3அடி ஆகவும், மேற்புற அகலம் 2அடி ஆகவும், குத்துயரம் 1.5அடி ஆகவும், அமையும் வகையில் வயல் துண்டத்தின் அளவிற்கு ஏற்ப தேவையான நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளன.

நீண்ட கால நோக்கில் தேசி, முருங்கை, மாதுளை போன்ற பல்லாண்டுப் பயிர்கள் ஒரு பயனாளிக்கு 80 கன்றுகள் வீதம் வழங்கப்பட்டு இம்மண் அணைகளின் மேல் 6-7 அடி இடைவெளியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

பசுந்தாட்பசளையாக பயன்படுத்தும் நோக்கில் குறித்த மாதிரித்துண்டங்களில் வீச்சு விதைப்பினை மேற்கொள்வதற்காக 1 ஏக்கர் விஸ்தீரணத்திற்கு 20 கி.கிராம் என்ற அளவில் சணல் விதை வழங்கப்பட்டது. விதைத்து 2-3 வார இடைவெளியில் சணலானது கொத்திப் புரட்டப்பட்டு மண்ணுடன் கலக்கப்படுகிறது. இதனால் சோளத்திற்குத் தேவையான நைதரசன் பசளையில் 25% குறைக்கப்படுகிறது. அத்துடன் முன்மாதிரிசெய்கைத் துண்டங்களை ஸ்தாபிக்க முன்னதாகவே குறித்த துண்டங்களில் மண்மாதிரிகள் எடுக்கப்பட்டு மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மண்பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில் தேவையான உரத்தை மட்டும் சோளச்செய்கைக்குப் பயன்படுத்த செய்கையாளர்களிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சோள நிரைகளுக்கு இடையிலான 4 அடி இடைவெளியில் காணப்படும் சணல் பயிர் மண்ணுடன் கொத்திப் புதைக்கப்பட்டதும் அவ் இடைவெளியினை பயனுள்ளதாக மாற்ற நிலக்கடலை, கௌப்பி, பயறு, போன்ற பயிர்கள் செய்கை பண்ணப்பட்டுள்ளன.

இந்நான்கு அடி இடைவெளியானது சோளப்பயிரில் படைப்புழுத்தாக்கம் போன்ற பீடைத்தாக்கங்கள் ஏற்படின் அதனை விரைவாக இனம் கண்டு முகாமைத்துவம் செய்வதற்கு உதவியாக அமைவதுடன் சிபார்சு செய்யப்பட்ட இரசாயனங்களை முறையாக விசிறுவதையும் இலகுவாக்குகிறது. இப்படைப்புழுக்களின் நிறையுடலி அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் நோக்குடன் பெரோமோன் பொறிகளும் ஆங்காங்கே நிலைப்படுத்தப் பட்டுள்ளன.

இம்முன்மாதிரித்துண்டங்களை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்கு மேற்கூறப்பட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதுடன், கோம்பாவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் கர்ணன்குடியிருப்பு என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்மாதிரிச் செய்கை ஸ்தாபித்தலுக்கான வயல்விழாவும் 16.10.2019 அன்று நடாத்தப்பட்டுள்ளது. இவ் வயல்விழாவில் 32 விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். ஏனைய பகுதிகளிலும் இம்முன்மாதிரித்துண்டச் செய்கையின் அடைவினை வெளிப்படுத்தும் வயல்விழாக்கள் இடம்பெறவுள்ளன. இவ்வாறாக இந்த முன்மாதிரிச்செய்கை மூலம் படைப்புழுவின் தாக்கத்தினால் பின் தங்கியுள்ள சோளப்பயிர்ச்செய்கையினை எமது பிரதேசத்தில் மேம்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.