செட்டிக்குளம் பகுதியில் உள்ள குளங்களின் மண்அரிப்பு பாதுகாப்பிற்கான சமன்வரை மண்திட்டு அமைத்தல்

மண் அரிப்பைத் தடுப்பதுடன் நீர்ப்பாசனக் குளங்களினுள் ஓடு நீருடன்(run-off) எடுத்து வரப்படும் மண் துணிக்கைகள் மற்றும் கழிவுகள் சேகரிக்கப்படுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக செட்டிக்குளம் பகுதியில் மதகுவைத்தகுளம், வேப்பங்குளம், தனக்கன்குளம் மற்றும் கூழாங்குளம் ஆகிய நான்கு குளங்களின் கீழ் சமன்வரை மண் திட்டுக்கள் அமைக்கும் பணியொன்று காலநிலைக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீரோட்டப் பாதைக்கு குறுக்காக 0.45 மீட்டர் உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இம் மண் திட்டுக்கள் ஓட்டத் தடையாக அமைவதால் அப் பகுதியில் நீர்த் துணிக்கைகளின் வேகம் வீழ்ச்சியடைகிறது. இதன் மூலம் மண் அரிப்பைத் தூண்டக்கூடிய அந் நீர்த் துணிக்கைகளின் இயக்கசக்தி இழிவளவில் பேணப்படுகிறது. மேலும், இப் பகுதியில் நீரானது தற்காலிகமாக சேமிக்கப்படுவதனால் ஓடு நீருடன் அடித்து வரப்படும் மண் துணிக்கைகள் மற்றும் கழிவுகள் இம் மண் திட்டு வழியே அடையலடைய விடப்படுவதுடன் தூய நீரானது குளங்களினுள் சேகரிக்கப்பட அனுமதிக்கப்படுகிறது. எனவே இம் மண் திட்டுக்கள் மண் அரிப்பைத் தடுப்பதற்கு மேலதிகமாக வண்டல் பொறியாகவும் தொழிற்படுகிறது. மேற்படி நான்கு குளங்களின் கீழ் ஏறத்தாழ 5500 மீட்டர் நீளமான மண் திட்டு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.