சுகாதார பணி உதவியாளர்களுக்கான நேர்முகத்தேர்வு மீண்டும் இடம்பெறும் – ஆளுநர்

போலியான சான்றிதழ்களுடன் நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் அதனுடைய பெறுபேறுகள் அனைத்தையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறும் , இந்த வெற்றிடத்துக்கு தோற்றிய 1923 பேருக்கும் மீண்டும் நேர்முகத்தேர்வினை நடத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இதுதொடர்பான அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார பணி உதவியாளர்களின் ஆட்சேர்ப்பின்போது சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை கண்டறிந்துள்ள ஆளுநர் அவர்கள் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.இதேவேளை நேர்முகத்தேர்வுக்கு வருகைதருபவர்கள் போலியான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் வருகை தந்து அவை பொய்யானவை என்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக தகுந்த சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

ஒரு மாதத்திற்குள் இந்த நேர்முகத்தேர்வினை நடாத்தி அவர்களை குறித்த வெற்றிடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பணித்த ஆளுநர் அவர்கள் , இதற்காக 24 குழுக்களை நியமிக்குமாறும் ஒரு குழுவில் 3 அதிகாரிகள் பணியாற்றுவதுடன் இதற்கு மேலதிகமாக பார்வையாளர்களாக வடமாகாண மக்கள் பிரதிநிதிகளின் பிரதிநிதி ஒருவரும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுபவர்களின் பிரதிநிதி ஒருவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் வெளிப்படைத்தன்மை நேர்முகத் தேர்வின்போது காணப்படும் என்றும் ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2020 ஜனவரி 1ஆம் திகதி முதல் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படும் ஆட்சேர்ப்புக்களில்; 6 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் , 5 சதவீதம் பெண் தலைமைத்துவ குடும்பங்களை சார்ந்தவர்கள் , 3 சதவீதம் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் ஒரு சதவீதம் மாற்றுப் பாலினத்தவருக்காகவும் இடத்தினை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஆளுநர் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

– வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு