கிளிநொச்சி மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 2023.10.27 அன்று  வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் கடத்தல் மற்றும் வனங்களில் மரங்களை வெட்டுதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும், சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தி சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் இன்றைய கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாதுகாப்பு தரப்பினருக்கு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய  தலைவர்களால் அறிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கார்மாநாடு, கல்லாறு, கிளாலி, முருசுமோட்டை, குடமூர்த்தி, உமையாள்புரம் அக்கராயன்குளம் மற்றும் குஞ்சுப்பரந்தன் உட்பட பல பிரதேசங்களில் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பாக மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் பல காண்பிக்கப்பட்டன. பொலிஸ் மற்றும் இராணுவம் இதனுடன் தொடர்புடைய திணைக்களங்களுடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த இக்கூட்டத்திலே தீர்மானிக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட 158 டிப்பர் ரக வாகனங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட உழவு இயந்திரங்களும்கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் சுட்டிக்காட்டியிருந்தனர். இதன்போது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அரச உயர் அதிகாரிகள் சிலர் கூட டிப்பர் வண்டிகளை பயன்படுத்தி மணல் கடத்தலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலை நாட்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரையும், பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும் முறிகண்டியில் இருந்து கிளிநொச்சி நகர எல்லை உட்பட பரந்தன் சந்தி வரை டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.மேற்கூறிய நேர எல்லைக்குள் ஏனைய வாகனங்களின் வேக வரம்பை மணிக்கு 40 கி.மீ ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டதுடன், இந்த விதிகளை மீறும் சாரதிகள் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் சூரிய சக்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மின்சாரம், நீர்ப்பாசனம், வீடமைப்பு, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், எதிர்காலத்தில் அமுல்படுத்த எதிர்பார்க்கப்படும் திட்டங்கள் மற்றும் இங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. வடமாகாண ஆளுநர் வடமாகாணத்தில் 25,000 நிரந்தர வீடுகளை நிர்மாணித்தல், சூரிய சக்தி மற்றும் மின்சார உற்பத்தித் திட்டங்கள் உட்பட மக்களுக்கு பயனளிக்கும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில் வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன, கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பாதுகாப்பு திணைக்களங்களின் தலைவர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.