கிறிசலிஸ் நிறுவனத்தினால் BRIDGE செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான அறிமுக நிகழ்வு நடாத்தப்பட்டது

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் , கிறிசலிஸ் நிறுவனத்தினால் வடமாகாணம் தழுவி நடத்தப்படும் ,பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடான அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தும் BRIDGE  செயற் திட்டத்தின் உத்தியோகபூர்வமான  அறிமுக நிகழ்வு 15/11/2023 புதன்கிழமை 9.30 மணி தொடக்கம் 2.00 மணிவரை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் கிறிசலிஸ் திட்ட முகாமையாளர் ம.பிரபாகரன் கிறிசலிஸ் பற்றிய சுருக்கமும் அதன் முக்கிய பணிகள் பற்றிய விளக்கமும் BRIDGE திட்டத்தின் அறிமுகத்தையும் , சமூக பொருளாதார ஆலோசகர் செல்வின் இரணியஸ் பிராந்திய அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்துவதற்கு பெண்கள் இளைஞர்களை ஈடுபடுத்துதல் மற்றும் வலுப்படுத்தலின் முக்கியத்துவத்தினையும் ,யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி கோசலை மதன் உள்ளடங்கலான அபிவிருத்தியின் பங்காளிகளாக இருப்பதற்கு பெண்கள் இளைஞர்கள் மற்றும் விளிம்பு நிலை சமூகங்களின் உரிமைகள் தொடர்பாகவும் உரையாற்றினர்.

இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் பேசுகையில் இன்றைய இளைஞர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க அரசு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் அவசியம் குறித்தும் அதிகரித்து வரும் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்த வேண்டிய நிலை குறித்தும் விளக்கினார்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும்  வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் உரையாற்றினர்.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக  வடமாகாண பிரதம செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர்கள்,   பணிப்பாளர் கிராம அபிவிருத்தி திணைக்களம்- வடமாகாணம்,   பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர்கள்,உதவிப் பிரதம செயலாளர், அமைச்சுக்களின் உதவிச் செயலாளர்கள்,  திட்டமிடல் பணிப்பாளர்கள், பிராந்திய இணைப்பாளர் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு,  திணைக்களத் தலைவர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர்கள், அரச அதிகாரிகள், கிறிசலிஸ் நிறுவன உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.