கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம்- யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கலந்துரையாடல்.

அதிமேதகு ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கை பிரகடனத்துக்கு அமைய கிராமிய பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்குரிய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 17 மார்ச் 2021 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தலைமையில் ஆரம்பமாகியது.

இத்தேசிய நிகழ்ச்சித்திட்ட கலந்துரையாடலில் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ மகிந்தானந்த அலுத்கமகே, வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், கடற்தொழில் நீரியல்வள துறை அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வடமாகாண பிரதேச செயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்பு செயலாளர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்ட திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் துறைசார் ரீதியாக விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக சுற்றுலாதுறை அபிவிருத்திக்கு அருமையான வாய்ப்புகள் வடமாகாணத்தில் காணப்படுவதால் அதற்கான திட்டம் ஒன்றினை தயாரிப்பதற்கு கௌரவ விவசாய அமைச்சரால் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் காணி மறுசீரமைப்பு அலுவலக ஆவணங்கள் அனுராதபுர அலுவலகத்திற்கு உட்பட்டமை தொடர்பில் உரிய அமைச்சின் செயலாளருடன் தொடர்புகொண்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் வடமாகாணத்தில் காணி அற்றோருக்கு முதன்மை கொடுத்து அவர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்காக விடுவிக்க அவ்விடயங்களுக்கு நேரில்சென்று ஆராய்வதாக கௌரவ விவசாய அமைச்சரால் உறுதியளிக்கப்பட்டது. சமுர்த்தி திணைக்களம் மற்றும் விவசாய திணைக்களங்களால் பல்வேறுபட்ட ஆளணி பற்றாகுறை நிலவுவதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அத்துடன் அம்பன் புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான கொடுப்பனவுகள் இன்னமும் வழங்கப்படாமை விதை உருளைக்கிழங்கு வழங்கல் மற்றும் வெங்காய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சிலர் பாதிக்கப்பட்டமை தொடர்பிலும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த கௌரவ விவசாய அமைச்சர் அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்காக 3,521 மில்லியன் ரூபா விவசாயத்துறை நடவடிக்கைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள்இ பல மில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட நெடுந்தூர பஸ்தரிப்பு நிலையத்தை செயற்படுத்த இலங்கை போக்குவரத்து சபையினர் நிர்வாகத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஒழுங்கு செய்யப்படும் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு ஒழுங்கான போக்குவரத்து சேவைகள் இடம்பெற ஒத்துழைப்பு வழங்கவும் வலியுறுத்தப்பட்டது.