களஞ்சியசாலைக்கான அடிக்கல் நாட்டும் விழா

உலக வங்கியின் அனுசரணையோடு காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் கீழ் 1000 மெற்றிக்தொன் களஞ்சியசாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட ஒட்டிசுட்டான் பிரதேசத்தில் கூழாமுறிப்பு எனும் கிராமத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலே 16 பெப்பிரவரி 2021 அன்று  இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், இந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் , ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர் , வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் களஞ்சிய சாலைகள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதென தெரிவித்ததோடு முல்லைத்தீவு மாவட்டத்திலே அமையப்பெறும் களஞ்சியசாலையானது 1000 மெற்றிக்தொன் கொள்ளளவு கொண்டது எனவும் 6 மெற்றிக்தொன் நெல்லை உலரவிடும் தளமும் இதனோடு அமையப்பெறும் எனவும் தெரிவித்தார்.
இக் களஞ்சியசாலைகளை விட மேலும் பத்து 1000 மெற்றிக்தொன் களஞ்சியசாலைகளை வடமாகாணத்தில் அமைத்து தருவோம் என விவசாய அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார் எனவும் தெரிவித்தார். அத்துடன் “விவசாயிகள் ஆகிய நீங்கள் உற்பத்திப் பொருட்களை சரியாகப் பதப்படுத்தி சேமித்து அதற்கு பெறுமதி சேர்க்கப்பட்டு சரியான விலைக்கு அதனை விற்பனை செய்யவேண்டும்” அதுவே இந்த களஞ்சிய சாலைகளின் நோக்கமாகும் என சுட்டிக்காட்டினார்.

மேலும் விவசாயிகள் தங்களுடைய உற்பத்திகளை அறுவடைசெய்தவுடனேயே விற்பனை செய்யும் மனப்பாங்கை மாற்றிக் கொள்ள வேண்டும்; எனவும் களஞ்சியசாலைகளை வினைத்திறனாக பயன்படுத்தி உங்களுடைய பொருட்களுக்கு நீங்களே விலையைத் தீர்மானிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் நிறுத்தப்பட்டு உள்ளுர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்தவேண்டுமானால் இங்கு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு இந்த மாகாணத்திலேயோ அல்லது மாவட்டத்திலேயோ பெறுமதி சேர்க்கும் நடவடிக்கை நடைபெறவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். அத்துடன் சென்றவாரம் வடமாகாணத்திற்கு விஜயம் செய்த கூட்டுறவு அமைப்புகளின் அமைச்சர்கள் இங்குள்ள கூட்டுறவு திணைக்களங்களுக்கு 9 மில்லியன் ரூபா காசோலைகளை நெற்கொள்வனவுக்காக வழங்கிவைத்தமையையும் நினைவு கூர்ந்தார்.
மேலும் வடமாகாணசபையின் மூலம் 20 மில்லியன் ரூபா வட்டி ,ல்லாத கடன்தொகையை தான் (கௌரவ ஆளுநர்) அவர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு பெற்றுக் கொடுத்தார் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் “பல்வேறு விவசாய , நீர்ப்பாசன திட்டங்கள் இந்த அரசினால் முன்னெடுக்கப்படுகின்றது எனவும் அதற்கு தலைமையேற்று நடத்தும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் வடமாகாண ஆளுநர் ஆகிய நானும் எப்பொழுதும் உங்களுக்கு துணைநிற்போம்” எனவும் தெரிவித்தார்.