ஒருங்கிணைந்த கருமூலவள மாதிரி பண்ணை – வயல் விழா

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டு தேராவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கருமூலவள மாதிரி பண்ணையில்; பெரிய அளவிலான பல்வகைமை வீட்டுத்தோட்டம் எனும் தொனிப்பொருளில் வயல் விழாவானது முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி யாமினி சசீலன் தலைமையில் 19.04.2023 அன்று நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைதீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன், சிறப்பு விருந்தினராக வட மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன், புதுக்குடியிருப்பு உதவி பிரதேச செயலாளர் எம்.சர்மினி, மாகாண விவசாயத் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர், பிரதேச கிராம அலுவலர் , விவசாயத் திணைக்கள பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வயல் விழாவில் வீட்டுத் தோட்டச் செய்கையில் பயிரிடக் கூடிய மறுவயற் பயிர்களான பயறு, கௌபீ, கம்பு, சோளம், தினை, குரக்கன் நிலக்கடலை, மரக்கறி பயிர்களான வெண்டி, கெக்கரி, பயிற்றை, பூசணி அவரை மற்றும் பழமரங்கள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் பயிர் பாதுகாப்பு தொடர்பாக விளக்கமளிக்கப்பபட்டது.
மேலும் அரசாங்க அதிபர் அவர்கள் உரையாற்றுகையில் இவ் வயல் விழாவின் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் விவசாயிகள் அறிந்து அதனூடக பயிர்ச் செய்கையை மேற்கொண்டு நற்பயனை பெறவேண்டும் என கருத்து தெரிவித்தார்.

மாகாண விவசாயப் பணிப்பாளர் அவர்கள் உரையாற்றுகையில் 120 ஏக்கர் பண்ணையை மிகவும் குறைந்தளவு உத்தியோகத்தர்களையும், பருவகால தொழிலாளர்களையும் கொண்டு இயங்குவது சவாலானதுடன் குறைந்த ஆளனியுடனும் குறைந்த வளத்துடனும் சிறந்த முறையில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது பாராட்டப்படவேண்டிய விடயம் எனவும் கருத்து தெரிவித்தார். மேலும் ஆளனி, வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தன்னாலான முழு முயற்சியையும் மேற்கொள்ளுவேன் எனவும் தெரிவித்தார்.