இந்திய அரசாங்கத்தின் நிதியுடன் நிர்மாணிக்கப்பட்ட வட/மத்திய மகளிர் கல்லூரியின் கட்டடத்திறப்பு விழா

தேசிய அளவில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிறைவேற்றப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் திறப்பு விழாவானது 04.10.2021 அன்று காலை 10.30 மணிக்கு கௌரவ பிரதம அமைச்சர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இருந்து மெய்நிகர் இணைய வழி தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய அரசாங்கத்தின் வெளிநாட்டு செயலாளர் கௌரவ சிறி ஹர்ஷ வர்தன் ஸ்ரீ றீங்லா அவர்கள் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வின் துணை நிகழ்வு மற்றும் வட/மத்திய மகளிர் கல்லூரியின் கட்டட திறப்பு விழா என்பன வட/மத்திய மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ வட மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், மாண்புமிகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, கௌரவ பிரதம அமைச்சர் மகிந்த ராஜபக்ஷ, கல்வி அமைச்சர், கௌரவ இந்திய பிரதம மந்திரி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்ததுடன், 2008 ல் இருந்து இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். அவ்வகையில் மெனிக் பாம் திட்டம் முதலாவதாக அமைந்ததையும் மேற்கோள் இட்டுக்காட்டினார்.

அத்துடன், இலங்கையில் நிலவும் அவசர நிலைமைகள், அனர்த்த சூழ்நிலைகள் மற்றும் உட்கட்டமைப்பு விருத்தி, வீட்டுத்திட்டம் என பல்வேறு வழிகளில் கிடைக்கப்பெறும் இந்தியாவின் உதவிகளை குறிப்பிட்டு கூறியதுடன் வவுனியாவில் அரசாங்க அதிபராக பதவி வகிக்கையில் கௌரவ. நிருபாமா ராவ் அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற வைத்தியசாலை நிர்மாணத்திற்கான நிதி உதவியினை சுட்டிக் காட்டி இருந்தார். மேலும் வரலாற்று ரீதியாக அயலவராகவும் சகோதரராகவும் காணப்படும் பிணைப்பு தொடர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் நீண்டகாலமாக இந்தியாவிடம் இருந்து கிடைக்கப்பெறும் உதவிகள், வழிகாட்டல்கள், ஆதரவுகள் என்பவற்றிற்கு நன்றியை தெரிவித்ததுடன் மக்களை சமூக பொருளாதார ரீதியில் மேம்படுத்த தொடர்ந்தும் உதவி நல்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந் நிகழ்வில் கௌரவ யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், இந்திய துணைத்தூதுவரின் பிரதிநிதி மீனாட்சி சுந்தரம் கிருஷணமூர்த்தி, வட மாகாண கல்விச் செயலாளர் திரு.இளங்கோவன், கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.