வடக்கு மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, இடமாற்றங்கள் வழங்கப்படாமை, அதிபர் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை தனித்தனியாக சந்தித்து கோரிக்கைகளை சமர்பித்தனர். இதன்போது வடக்கு மாகாண கல்விச் செயலாளர் பெற்றிக் நிரஞ்சனும் சமூகமளித்திருந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று (15.12.2023) முற்பகல் இந்த சந்திப்புகள் இடம்பெற்றன.
புதிய அதிபர் நியமனத்தால், இதுவரை பதில் கடமை ஆற்றியவர்கள் பாதிப்புக்குள்ளகி உள்ளதாகவும், கடினமான காலப்பகுதியில் பாடசாலை சமூகத்தை கட்டியெழுப்ப பாரிய முயற்சிகளை மேற்கொண்டதாகவும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம், கௌரவ ஆளுநரிடம் தெரிவித்தனர். போட்டிப் பரீட்சையூடாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் அவர்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர். இதனால் பல வருடங்களாக பதில் கடமை புரிந்த அதிபர்கள், உள ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறினர். இந்நிலையில் ஏனைய மாகாணங்களில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு தங்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறும் வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கத்தினர் கோரிக்கை முன்வைத்தனர். விடயங்களை கேட்டறிந்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், தேவை ஏற்படின் ஜனாதிபதியின் கவனத்திற்கும் விடயங்களை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் உயர்தர வகுப்புகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், சில ஆசிரியர்களின் இடமாற்றங்களில் சிக்கல் காணப்படுவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கௌரவ ஆளுநரிடம் தெரிவித்தனர். அத்துடன் பாடசாலைகளில் காணப்படும் அபாயகரமான கட்டடங்கள் தொடர்பில் முன்னெடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைகள், மாணவர்களுக்கான போசாக்கு திட்டம், தொண்டர் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரால் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
பாடசாலைகளில் காணப்படும் அபாயகரமான கட்டடங்கள் தொடர்பில் தரவுகள் சேகரிக்கப்படுவதாகவும், ஒரு சில கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது வடக்கு மாகாண கல்விச் செயலாளர் பெற்றிக் நிரஞ்சன் தெரிவித்தார். மாகாணத்தில் உள்ள உயர்தர வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் தவிர , ஏனைய ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலதிகமாகவே காணப்படுவதாகவும், கௌரவ ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய, இடமாற்றக் கொள்கை அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் இடமாற்றத்தில் எவ்வித பாரபட்சமும் தேவையில்லை எனவும், இடமாற்றக் கொள்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது கௌரவ ஆளுநர் தெரிவித்தார். இந்த விடயம் குறித்து கல்வித்துறைசார் அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும், வழங்கப்படும் பணிப்புரைகளை செயற்படுத்தாத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும், மாகாண கல்விச் செயலாளருக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அறிவித்தார்.
அத்துடன் மாணவர்களுக்கான போசாக்கு திட்ட முன்மொழிவுகள் மத்திய கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்த உடன் அந்த திட்டங்கள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார். அத்துடன் சில பிரச்னைகள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருப்பதால் விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.