முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோகம் 2020இல் உப உணவுப் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முகமாக நடைமுறைப்படுத்தப்படும் CSIAP திட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுபோகம் 2020இல் உப உணவுப் பயிர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முகமாக உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டம் (CSIAP)

கொரோனா வைரஸ் அனர்த்த நிலைமை காரணமாக அனைத்து நாடுகளினதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாய நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக இலங்கையினால் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படும் விவசாய உற்பத்திப்பொருட்களின் இறக்குமதி பாதிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன.

இதன் காரணமாக எதிர்காலத்தில் விவசாய உற்பத்திகளிற்குத் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் இவற்றின் விலைகளும் அதிகரிக்கும் நிலை காணப்படுகின்றது. இந் நிலைமையினை ஈடுசெய்யும் நோக்கில் விவசாய அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதன் முதற்கட்டமாக முல்லைத்தீவு மாவட்;டத்தின் சிறுபோகம் 2020 இல் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் முகமாக உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் (CSIAP) ஊடாக கணேசபுரம், முத்தையன்கட்டு, கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், தண்டுவான், புளியங்குளம், தச்சடம்பன், மந்துவில், கேப்பாப்புலவு, முள்ளியவளை, ஐயங்கன்குளம், கோட்டைகட்டியகுளம் ஆகிய விவசாயப்போதனாசிரியர் பிரிவுகளில் உற்பத்தியாளர் குழு அங்கத்தவர்களில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளிற்கு 320கி.கி. உழுந்து, 390கி.கி. பயறு, 16 கி.கி. மிளகாய், 16.8 கி.கி. குரக்கன், 14 கி.கி. எள்ளு, 8,000கி.கி. சின்ன வெங்காயம், 20,000 கி.கி. நிலக்கடலை மற்றும் 487.5 கி.கி. கௌபி, என்பன விநியோகிக்கப்பட்டு பயிர் ஸ்தாபிக்கப்படுகின்றது.

மேலும் இருநூற்று ஐம்பது வீட்டுத்தோட்டங்களிற்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு நீர்ப்பாசனத்தொகுதிகள் மற்றும் விதை உள்ளீடுகளாக வழங்கப்படவுள்ளன. கொத்தணிக்கிராமமாக ஓட்டுசுட்டான் பிரதேசத்திலுள்ள வித்தியாபுரம் கிராமம் தெரிவு செய்யப்பட்டு இருபது பயனாளிகளிற்கு 0.25 ஏக்கரிற்கு தூவல் நீர்ப்பாசனத்தொகுதி மற்றும் 200 கி.கி சின்னவெங்காய குமிழ் வீதம் 4000 கி.கி குமிழ்கள் விநியோகிக்கப்பட்டு நாற்றுமேடை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இவ் உள்ளீடுகளிலிருந்து சிறப்பான விளைச்சலைப் பெற்றுக்கொள்வதற்காக விவசாயிகளின் தோட்டங்களிற்கு நேரடி களவிஜயம் மேற்கொள்ளுதல், பயிற்சி வகுப்புக்கள் மற்றும் வயல்விழாக்கள் நடாத்துதல் போன்ற வழிமுறைகளினைப் பின்பற்றுவதனூடாகத் தொழில்நுட்ப ஆலோசனைகள் விவசாயத் திணைக்களத்தினரால் வழங்கப்படுவதுடன் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புக்;களினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.