முல்லைத்தீவு மாவட்டத்தில் காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாயச் செயற்றிட்டத்தின் கீழ் விதைகள் வழங்கும் நிகழ்வு

உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் இறக்குமதி பாதிப்படைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. எனவே எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொண்டு உணவுப் பாதுகாப்பினை நிலைநாட்டும் நோக்கில் மத்திய மற்றும் மாகாண விவசாயத் திணைக்களங்களினால் உப உணவுப் பயிர்ச் செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு செயற்றிட்டங்களினூடாக விதைகள் விவசாயிகளுக்கு இலவசமாகவும் மானிய அடிப்படையிலும் விநியோகிக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கோட்டைகட்டியகுளம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் விவசாயப் போதனாசிரியர் திரு.க.தனுசீலன் அவர்களின் தலைமையில் 06.05.2020 ஆம் திகதி பி.ப.2.00 மணிக்கு கோட்டைகட்டிய குளம் பொது நோக்கு மண்டபத்தில் காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் செயற்றிட்டத்தினூடாக விதைகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் காலநிலைக்குச் சீரமைவான நீர்ப்பாசன விவசாயச் செயற்றிட்டத்தின் நிறவன மற்றும் திறன் மேம்பாட்டு நிபுணராகக் கடமையாற்றும் திரு.இ.சஞ்சீபன், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய் பணிப்பாளர் அலுவலகத்தைச் சேர்ந்த பயிர்ப் பாதுகாப்பிற்கான பாடவிதான உத்தியோகத்தர் திரு.தயாளசீலன் மற்;றும் சுற்றாடல் உத்தியோகத்தர் செல்வி.கேசிகா மற்றும் அப் பகுதி விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் மறுவயற் பயிர்ச் செய்கையினை மேற்கொள்வதற்காக 2,000கி.கி. நிலக்கடலை 60கி.கி. பயறு 240கி.கி உழுந்து, 64கி.கி. கௌபி, 2.4கி.கி மிளகாய், 1000கி.கி சின்ன வெங்காய குமிழ்கள் ஆகியன 110 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இப் பிரதேசத்தில் சிறு போகத்தில் நிலவும் நீர்ப் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு குறைந்த நீர் தேவையுடைய பயிர்கள் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டமை குறிப்பி;டத்தக்கது. நிலக்கடலை, உழுந்து என்பன மேட்டுநில விதையிடும் கருவி மூலம் வரிசையில் விதைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முலம் சீரான பயிரடர்த்தி பேணப்படுவதுடன் களைக் கட்டுப்பாடும் மேட்டுநில களையகற்றும் கருவி மூலம் இலகுவாக செய்யப்படும். மேலும் உழுந்து பயிர்ச்செய்கையில் மஞ்சளாதல் குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள், மிளகாய் செய்கையில்  நாற்றுமேடை தொழில் நுட்பங்கள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.