கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி

கௌரவ அமைச்சர் திரு. ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் திடீர் மறைவானது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி மலையகவாழ் மக்களுக்கும் எமக்கும் பேரதிர்ச்சியையம் பெருந்துயரினையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்களின் மேன்மைக்காகவும் நாட்டின் முன்னேற்திற்காகவும் பெரும் பணி செய்த ஒருவராகக் காணப்படுவதுடன் அவரது நீண்ட கால அரசியல் அனுபவமும் ஆளுமைத்திறனும் மக்களிற்கும் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் பெரும் துணையாக அமைந்தன.

நான் வடக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றதன் பின்னர், நீண்டகால போரினால் பாதிக்கப்பட்டு நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் பொருட்டான திட்டங்கள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடுதவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தவகையில் வடக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு ஐந்து மாவட்டங்களிலும் 1375 வீடற்ற குடும்பங்களிற்கான வீடமைப்பு திட்டத்தினை தனது அமைச்சின் கீழான நிதியினூடாக மேற்கொள்வதற்கு ஒப்புதலையும் அதற்கான நிதி ஒதுக்கீட்டினையும் எமக்கு வழங்கியுள்ளார்.

அத்துடன் யாழ்மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கும் காணியற்ற மக்களுக்கு காணி கொள்வனவு செய்வதற்காக 22 மில்லியன் தொகையை தனது அமைச்சின் மூலம் விடுவித்துள்ளார்.

இவ்வாறாக நலிவுற்றோரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கென ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கும் ஏற்ற வகையில், பல முயற்சிகைள மேற்கொண்டு அவரால் முன்னெடுக்கப்பட்ட பல்வகையான வெற்றிகரமான திட்டங்கள் இலங்கை வாழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தினைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை வடக்கு மாகாண மக்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

P.S.M.சார்ள்ஸ்
ஆளுநர்
வட மாகாணம்